வீரத்துறவி விவேகானந்தர் போற்றிய மன்னர் பாஸ்கர சேதுபதி நமது மேதகு சிங்கம்பட்டி மகாராஜா T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழி பாட்டனார் ஆவார்.
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு வழங்கிய நினைவுப் பரிசான அழகிய மரத்தினாலான யானைச் சிற்பம் நமது ராஜாவிற்கு அன்பு பரிசாக வழங்கப்பட்டு சிங்கம்பட்டி அரண்மனை அருங்காட்சியகத்தில் இன்று வரை இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக