திங்கள், 26 நவம்பர், 2018

தூக்குத்துரை உண்மை கதை

தூக்குத் துரை உண்மை கதை
ஆனந்த விகடன் பொக்கிஷம் 07-Mar-2012

திருநெல்வேலி ஜில்லா சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரியசாமி தேவருக்கு அன்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை; இருப்பும் கொள்ளவில்லை.

அன்று மதுரையில் இருந்து வந்த கடிதம்தான் அவரை அப்படி நிலைகுலையச் செய்துவிட்டது. அதை மீண்டும் படித்துப் பார்த்தார். 'மகராஜாவுக்கு - உங்கள் அடிமை ராமசாமி எழுதியது. அடியேன் இப்போது மதுரை ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறேன். கொலை செய்ததாகவும் கொள்ளையடித்ததாகவும் என் மேல் குற்றம்சாட்டித் தூக்குத் தண்டனை கொடுத்துவிட்டார்கள். அடுத்த மாசவாக்கில் என்னைத் தூக்கில் போடுவார்கள்போலத் தெரிகிறது. மகாராஜாவுக்கு இதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.’ படிக்கப் படிக்கப் பெரியசாமிக்கு ஆத்திரம் பொங்குகிறது. 'கொண்டு வா குதிரையை’ என்று கர்ஜித்து, குதிரையில் ஏறிப் புறப்பட்டார்.

அந்தப் பகுதி ஜமீன்தார்களுக்குள்ளேயே கொஞ்சம் வித்தியாசமானவர் இவர். வயசு 27தான்.  திருமணமும் செய்துகொள்ளவில்லை. ஆஜானுபாகுவான உருவம்; வளமான ஜமீன், இள ரத்தம் வேறு; பிறகு கேட்க வேண்டுமா என்ன, பிடிவாதத்துக்கும் திமிருக்கும். புலிப் பால் வேண்டும் என்று அவர் விரும்பினால், அது வந்தே ஆக வேண்டும். அப்படி ஒரு குணம் ஜமீன்தாருக்கு.

வட நாட்டு சேட்டுகளோடு நமது ஜமீன்தாருக்குப் பழக்கம் அதிகம். அவர்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவை அவருக்கு அத்துப்படி. சேட்டுகள் பேசுவதுபோலவே இந்தி கலந்த கொச்சைத் தமிழ் பேசுவார். எனவே, ஒரு பெரிய சேட்ஜிபோல் உடை உடுத்தி 'அசல்’ சேட்டுபோல மதுரை வந்து சேர்ந்தார். அங்கே தனியாக ஒரு மாளிகை அமர்த்திச் சில நாட்கள் தங்கியிருந்தார்.

மதுரை ஜெயிலர் நானாசாகிப். இவர் ஒரு பட்டாணி. இவரைத் தன் நண்பராக ஆக்கிக்கொண்டார் ஜமீன்தார். அடிக்கடி ஜெயிலரின் வீட்டுக்குப் போவது, பரிசுகள் கொடுப்பது, ஜெயிலுக்குப் போவது, அங்குள்ள உதவியாளர் களிடம் பேசுவது, கைதிகளைப் பார்ப்பது, அவர்களுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பது, இங்கிலீஷ் தெரிந்தவர்களிடம் இங்கிலீஷிலும் இந்தி தெரிந்தவர்களிடம் இந்தியிலும் பேசுவது - இப்படி மதுரை ஜெயிலில் நமது 'சேட் ஜமீன்தார்’ ஒரு முக்கியப் புள்ளிஆகிவிட்டார்.

இதற்கிடையில் கைதிகளுக்கு இனிப்புக் கொடுக்கும் சாக்கில் நண்பர் ராமசாமியைப் பார்த்துத் தான் வந்திருப்பதையும் காட்டிக்கொண்டார்.

அப்படி இப்படி என்று மாதம் ஒன்றாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் - அதாவது, ராமசாமியை ஜெயிலில் இருந்து கடத்திக்கொண்டு போய்விட வேண்டும்.

ஒரு நாள் மாலை வழக்கம்போல் ஜெயிலரும் சேட்டும் வைகைக் கரைக்குக் குதிரையில் போய் அங்கு மணலில் அமர்ந்து அரட்டையில் இருக்கின்றனர். மெதுவாக இருட்டிக்கொண்டு வருகிறது. அப்போது, மெள்ள தான் யார் என்பதையும், மதுரை வந்த நோக்கத்தையும் பக்குவமாக வெளியிடுகிறார் ஜமீன்தார். இதைக் கேட்டு ஜெயிலர் திகைத்து நிற்க, ஜமீன்தாரோ தன் பணபலத்தையும் செல்வாக்கையும் அவருக்கு உணர்த்த - இதில் எல்லாம் மயங்காத ஜெயிலர், ஜமீன்தாரின் உறவை முறித்துக்கொண்டு கிளம்ப நினைக்கும்போதுதான் அந்த விபரீதம் நடக் கின்றது.

வார்த்தைகள் தடித்துக் கைகலப்புத் தொடங்குகின்றது. இதை முன்னமே எதிர்பார்த்து வந்திருந்த ஜமீன்தார், ஜெயிலரைக் கொன்றுவிடுகிறார். தான் யார் என்பதை அடையாளம் காட்டிய பிறகு இரண்டில் ஒன்றை முடித்துத்தானே ஆக வேண்டும்? தான் வந்த குதிரையின் சேணத்துடன் ஜெயிலரின் உடலைக் கட்டி வைகை மணலில் புதைத்துவிட்டு அவசரமாக ஜெயிலுக்கு வருகிறார்.

அங்குள்ளவர்கள் அனைவரும் அவருடைய சிநேகிதர்கள் ஆயிற்றே! அதிலும் அன்று தனக்குப் பிறந்த நாள் என்று சொல்லிவைத்துஇருந்தார். ஒவ்வொருவருக்கும் சந்தோஷமாக ரூபாய்களை அள்ளி வீசுகிறார். ராமசாமியைப் பார்க்க வேண்டும் என்று ஜமீன்தார் சொல்ல, அவர்களும் வழக்கம்போல் அவரைத் திறந்துவிட, அவரோடு சில விஷயங்கள் பேச வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவரை சிங்கம்பட்டிக்கே கடத்திக் கொண்டுவந்துவிட்டார் ஜமீன்தார்.

மறுநாள் மதுரை எங்கும் ஒரே பரபரப்பு. 'ஜெயிலர் நானாசாகிப்பைக் காணவில்லை. தூக்குத் தண்டனைக் கைதி ராமசாமி தேவரை, வட நாட்டு சேட்டு கடத்திக்கொண்டு போய்விட்டார்!’ இதுவே எங்கும் பேச்சு. குதிரைச் சேணத்துடன் அவசர அவசரமாக வைகை மணலில் புதைக்கப்பட்ட ஜெயிலரின் உடலை நாய்கள் வெளியே இழுத்துப்போட, சேணத்தின் உட்பக்கம் எழுதப்பட்டு இருந்த சிங்கம்பட்டி சமஸ்தான முத்திரையைக்கொண்டு 'இவ்வளவு நாட்களும் நாடகமாடியவர் வட நாட்டு சேட்டு இல்லை - சிங்கம்பட்டி ஜமீன்தாரே’ என்ற உண்மை தெரியவருகிறது. பிறகு என்ன? ஜமீன்தார் கைதுசெய்யப்படுகிறார்; வழக்கு நடக்கின்றது. தூக்குத் தண்டனை கிடைக்கின்றது.

கொலைசெய்யப்பட்ட ஜெயிலர் நானா சாகிப்பின் மனைவி அப்போது திருநெல்வேலி கலெக்டர் துரைக்கு ஒரு வேண்டுகோள் விடுக் கிறார். 'ஜமீன்தார் பெரியசாமியை அவருடைய குடிபடைகள் அனைவரும் கூடியிருக்கும்போது, அவர்கள் அனைவரின் முன்னிலையில் சிங்கம் பட்டியிலேயே பட்டப்பகலில் தூக்கிலிட வேண்டும்’ என்று. அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஏ.சி. ராக்டன் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்.

7.10.1834. சிங்கம்பட்டியே அல்லோலகல்லோலப்பட்டது. பக்கத்துப் பட்டிகளில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள். ஜமீன்தார் பெரியசாமியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 'உப்பைத் தின்றவன் தண்ணியைக் குடித்துத்தானே ஆக வேண்டும்? எனக்கென்ன... பெண்டாட்டியா, பிள்ளையா? ஒரு சிநேகிதனைக் காப்பாற்ற நான் செய்தது சரிதானே?’ என்று நினைத்தபடி, கம்பீரமாக நடந்து தூக்கு மரத்துக்கு வருகிறார். ஜமீன்தாரால் தூக்குமேடைக்குப் போக முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அப்போது ஜமீன்தார் ''எனக்குச் சிலம்பம் தெரியும். ஒரு கம்பு (கழி) கொடுத்தீர்கள் என்றால், சிலம்பம் ஆடிக்கொண்டே இந்தக் கூட்டத்தை விலக்கித் தூக்கு மேடைக்குப் போய்விடுகிறேன்'' என்று சொல்ல, அவருடைய துணிச்சலைக் கண்டு அதிசயப்பட்டு, அதிகாரிகள் திகைத்தனர்.

ஜமீன் அழிந்துபோகக் கூடாது என்று நினைத்த பிரிட்டிஷ் அரசாங்கம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, அந்தமானுக்கு அவரை அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு கலெக்டர் கைக்கு கடைசி நேரத்தில் வந்து சேர்கிறது.

கலெக்டர், இவர் மன்னிப்பு கேட்பார் என்று எண்ணி!
''சரி! உங்கள் கடைசி விருப்பம் என்ன?''
" என்னிடம் மன்னிப்பு கேல் துகிலடாமல் விட்டு விடுகிறேன்"  என்று சொல்ல,

ஜமீன்தாரோ
" நீ யாருடா என்னை மன்னிக்க" 
என்று சொல்லி, அவரது முகத்தில் துப்பி விட்டார்!

அவமானப்பட்டுப்போன கலெக்டர் ராக்டன் தூக்கு இரத்து ஆன அரசாங்க உத்தரவை மறைத்து, உடனே ஜமீன்தாரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கிறார். ''அந்தத் தூக்கு மரத்தில் இருந்து ஜமீன்தாரின் உடலைக் கீழே இறக்கக் கூடாது; கழுகுகள் கொத்தித் தின்னட்டும்'' என்று ஆணையும் பிறப்பித்துவிடுகிறார். ஆணை நிறை வேற்றப்படுகின்றது.

இப்போது ஜமீன் இல்லை. ஆனால், சிங்கம் பட்டியும் அதன் அழகான அரண்மனையும் இன்றும் இருக்கின்றன. தூக்கிலிடப்பட்ட பெரியசாமியை 'தூக்குத் துரை’ என்றுதான் சொல்லுகிறார்கள். அவருடைய சிலை அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருக்கிறது. தூக்கிலிடப்பட்ட இடம் 'தூக்கு மரத்து வயல்’ என்ற பெயரோடு இன்றும் இருக்கிறது. தூக்குத் துரையின் ஆவியை அடிக்கடி பார்ப்பதாக அங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். #தூக்குத்துரை  #தூக்குதுரை
#thookudurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக