செவ்வாய், 12 மார்ச், 2019

அயன் சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி ஶ்ரீ சங்கிலி பூதத்தார் கோவில் மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா சிறப்பு நடைமுறைகள்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா அயன் சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி ஶ்ரீ சங்கிலி பூதத்தார் கோவில் மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா சிறப்பு நடைமுறைகள்.

சிவமைந்தர் ராஜ மன்னர் ஐயன் அருள்மிகு சுவாமி ஶ்ரீ சங்கிலி பூதத்தார் உத்தரவுப்படி மாசி மாத சிவராத்திரி திருவிழா நேரம் தவிர மற்ற மாத காலங்கள் முழுதும் திறந்த வெளியாக இருக்கும் அயன் சிங்கம்பட்டி ஆலயத்தில் காலம் காலமாக ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தான ஆஸ்தான ஜோதிடரான புளியமரத்தடி ஜோதிடர் குறித்து தரும் நல்ல நாளில் சுப முகூர்த்தத்தில் கால்நாட்டு விழா எனப்படும் பந்தல் கால் ஊன்றப்படும் தினத்திலிருந்து திருவிழா தொடங்கி விடும். அன்று முதல் விரதம் தொடங்க ஆரம்பிக்கும் சிங்கம்பட்டி வாழ் மக்கள் வெளியூர்களில் தங்க மாட்டார்கள். எங்கு சென்றாலும் இரவுக்குள் வீடு திரும்பி விடுவார்கள்.

கால்நாட்டு விழா தொடங்கி சிவராத்திரி மூன்று நாள் திருவிழா சிறப்பாக முடிந்து ஒரு வாரம் கழித்து எட்டாம் திருநாள் பூஜை முடியும் வரை வீடுகளில் அசைவம் சமைக்க மாட்டார்கள். பழைய சோறு, கறி உண்ண மாட்டார்கள். காலை, இரவு இரண்டு வேளையும் புளிக்காத, அன்று அரைத்த மாவினால் சுட்ட இட்லி, தோசை தான் விரதம் இருப்போர்க்கு உணவு.

கோயிலில் கூரை அமைக்க கூடாது என்ற அய்யனின் உத்தரவால் ஆண்டு முழுதும் வெயில், மழையில் காய்ந்து, கரைந்து இருக்கும் அனைத்து சுவாமிகளின் பீடங்களும் கால்நாட்டு விழாவிற்கு பின் சுத்தப்படுத்தப் படும். புதுச்செம்மண் கொண்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பாக புனரமைக்கப் பட்டு, சுண்ணாம்பு பூசப்பட்டு கம்பீரமாக புத்துருவாக்கம் பெறும் சுவாமிகளின் பிரமாண்ட பீடங்கள் அனைத்தும் காண்போரை கரம் தூக்கி தொழ வைக்கும்.

சுத்த சைவரான சுவாமி சங்கிலி பூதத்தாரின் ஆலயத்தில் அம்மன்கள் முதலான அனைத்து பரிவார சுவாமிகளுக்குமே ஆடு, கோழி பலி கிடையாது என்பதால் சிங்கம்பட்டி மக்களும், சுவாமி தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்களும் 21 அடி உயர விஸ்வரூப ஐயனுக்கு பல வண்ண பட்டுக்களையும், எடை மிகுந்த பிரமாண்ட வண்ணப்பூக்களால் ஆன மாலைகளையும், பல ஆயிரம் எண்ணிக்கை கொண்ட எலுமிச்சைகள், வடைகள் கோர்த்த மாலைகள் அணிவித்து வேண்டுவார்கள் என்பதாலும், அவரவர் வயல்களில் விளைந்த மற்றும் விலைக்கு வாங்கி வரும் வாழைப்பழக்குலைகளை கோயில் முழுதும் பந்தல் கம்புகளில் கட்டுவர் என்பதாலும்  பாரம் தாங்குமாறு மிக உறுதியாக பந்தல் அமைக்கப்படும்.

சிவராத்திரி தினம் காலை நேரத்தில் சங்கிலி  எடுக்க அயன் சிங்கம்பட்டி ஆலயத்தில் இருந்து கிளம்பும் சாமி கொண்டாடியானவர் நடைப்பயணமாக பழைய ஜமீன் காட்டுப்பாதை வழியாக காரையார் சொரிமுத்து ஐயனார்  கோவிலுக்கு செல்வார். அவர் சொரிமுத்து ஐயனார் கோவில் சென்று, ஆற்றில் குளித்து அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, சங்கிலி எடுத்து கிளம்பும்  நேரம் வரை மற்ற பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப் பட மாட்டார்கள். காரையாற்றில் அமைக்கப்பட்டு இருக்கும் பாலத்தின் அக்கரையிலே கயிறு கட்டி தடுக்கப் படும் பக்தர்கள் சாமி கொண்டாடி கோயிலை விட்டு கிளம்பிய பின்னரே சொரிமுத்து ஐயனார் ஆலய வளாகம் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

சங்கிலி எடுத்து வரும் சாமி காரையாரில் இருந்து காட்டுப்பாதையாக கிளம்பிய அதே மதியம் மூன்று மணி அளவில் மேலச் சங்கிலி எனப்படும் ஜமீன் சிங்கம்பட்டி மக்களும், கீழச் சங்கிலி என்று அழைக்கப்படும் அயன் சிங்கம்பட்டி மக்களும்  அவரவர் ஊர்களுக்கு பாத்தியப்பட்ட  வல்லயங்கள், குண்டாந்தடிகள், மூன்று விரல் தடிமனான ஆளுயர கருந்தேக்கு கம்புகள், கழிகள்,  பல தரப்பட்ட வடிவிலான பித்தளை, வெண்கல விளக்குகள், தாம்பாளங்கள், தீபாரதனைத் தட்டுக்கள், அலங்காரப் பொருட்கள், பல வண்ணப் பட்டுக்கள் அடங்கிய ஆபரணப் பெட்டிகளை மேள, தாளங்களோடு  இரண்டு ஊர் ஆற்றங்கரைகளூக்கு எடுத்துச் செல்வர்.

அனைவரும் ஆற்றில் குளித்து, பூஜை செய்து விட்டு ஆபரணப் பெட்டிகளில் மடித்து வைக்கப் பட்டிருக்கும் பல வண்ணப் பட்டுகளையும் வெளியே எடுத்து ஆராய்ந்து, நல்ல பட்டுக்களை ஆற்றில் அலசி, பாறைகளில் விரித்து வெயிலில் காயப் போடுவர். பழைய பட்டுக்களை ஆற்றோடு விட்டு விடுவர்.

வல்லயங்கள், குண்டாந்தடிகள், ஆளுயர கருந்தேக்கு கம்புகள், கழிகள்,  பல தரப்பட்ட வடிவிலான பித்தளை, வெண்கல விளக்குகள், தாம்பாளங்கள், தீபாரதனைத் தட்டுக்கள், அலங்காரப் பொருட்கள், ஆபரணப் பெட்டிகள் அனைத்தையும் பழைய பிசுக்குகள் போக ஆற்றில் நன்றாக தேய்த்து' கழுவி, காய வைத்து, சந்தனம், திருநீறு, குங்குமம் பூசி, பூ மாலைகள் அணிவித்து தயாராக வைத்துக் கொள்வர்.

ஆபரணப் பெட்டிகளுக்குள் விளக்குகள் மற்றும் பித்தளை, வெண்கல சாமான்களையும், மடித்து எடுத்து வைத்துள்ள காய்ந்த பட்டுக்களையும் மீண்டும் அடுக்கி வைத்து விடுவர்.

மாலை ஐந்தரை மணி அளவில் இவ்வளவு வேலைகளும் முடித்துவிட்டு இரண்டு ஊர் மக்களும் அவரவர் கரைகளில் சாமி வரவிற்காக காத்திருப்பர். உயரமான பாறைகளில் ஏறி ஓட்டமும், நடையுமாக ஆதாளி சத்தம் போட்டுக் கொண்டு சாமி தொலைவில் வரும்போதே பார்த்து விடும் இளவட்டங்கள் வெடி,  வேட்டுக்கள் போட்டு அனைவரையும் உஷார் படுத்துவர்.

இரண்டு ஊர் கரைகளிலும் மேள, தாளங்கள் முழங்க, சாமி கொண்டாடி ஆற்றில் இறங்கி, கீழச் சங்கிலி கரை அடைந்து மக்களோடு கோவில் நோக்கிச் செல்வார். மேலச் சங்கிலி மக்கள் ஜமீன் சிங்கம்பட்டி ஊர் வழியாக  மேள தாளங்கள் முழங்க, வேட்டுச் சத்தத்தோடு, பெண்கள் குலவையிட ஆபரணப் பெட்டிகள், வல்லயங்கள், குண்டாந்தடிகள், கமபுகள் சுமந்து ஆலயம் அடையும் நேரம் கீழச் சங்கிலி மக்களும் அவர்கள் ஊர் வழியாக சாமியை அழைத்துக் கொண்டு அயன் சிங்கம்பட்டி ஆலயம் வந்து அடைவர்.

இரண்டு பெருங்கடல்கள் கலப்பது போல ஆரவாரத்துடன் இரண்டு ஊர் மக்களும் கோவிலுக்குள் ஒன்றாக சென்றதும்  சாமி கொண்டாடி சுவாமி திருவடியில் சங்கிலியை வைத்து சாமி ஆடி முடிக்கவும், ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தான ஆஸ்தான அர்ச்சகர் தமது குழுவினரோடு பூஜை, புனஸ்காரங்கள் செய்து, தீபாராதனை காட்டி, அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனம், குங்குமம் தெளித்து தீர்த்தக் குடங்கள் மேலேற்றுவார்.

சுவாமி தரிசனம் முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன், வல்லரக்கன் கதை பாடி தொடங்கும் வில்லுப்பாட்டு மூன்று நாட்கள் அனைத்து சுவாமிகளுக்கும இரவு, பகலாக தொடர்ந்து பாடப்படும். முதல் தினமான சிவராத்திரி இரவன்றும்,மறுநாளும் பெரும்பாலான பக்தர்கள் வில்லுப்பாட்டு கேட்டுக் கொண்டு கோவிலிலே இரவு முழுதும் தங்கி விடுவர்.

இரண்டாம் நாள் துளசி மூடுகளை அனைத்து சுவாமி பீடங்களையும் சுற்றிக் கட்டி, பட்டுகள் சார்த்தி அலங்காரம் செய்யத் தொடங்குவர். பல ஊர் பக்தர்களும் பகல், இரவு முழுவதும் தொடர்ந்து வந்து சுவாமிக்கு பட்டுக்கள், பூ மாலைகள் சார்த்தி, தரிசனம் செய்து சென்று கொண்டே இருப்பார்கள்.

மூன்றாம் நாள் காலை முதலே பல ஊர் பக்தர்களும் அவரவர்  வேண்டுதல் காணிக்கைகளான  புதுப் பட்டுக்கள், பல வண்ண பூ மாலைகள், பழக்குலைகள், எலுமிச்சை, வடை மாலைகளோடு வரிசையாக வர அனைத்தும் ஐயனுக்கு அணிவித்து அழகு செய்யப் படும். காலை பத்து மணி அளவில் சிங்கம்பட்டி ஜமீன்தார் மேதகு மகாராஜா டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் படை, பரிவாரங்களுடன் வந்து  தரிசனம் செய்யும் நேரத்தில் இரண்டாவது முறை தீபராதானை காண்பிக்கப்படும.

பகல் பொழுது முழுதும் சாரை, சாரையாக பல ஊர் பக்தர்களும் வேண்டுதல் காணிக்கைகளோடு கோயில் வந்து குவிந்து கொண்டே இருப்பார்கள். மாலை ஆறு மணி அளவில் சுவாமி சங்கிலி பூதத்தார் கதை பாடும் போதே பலரும் அருள் வந்து ஆடி சங்கிலி எடுத்து அடிக்க, வில்லுப்பாட்டு முடிந்ததும், மேள தாளங்கள் முழங்க ஐயனுக்கு மூன்றாவது முறையாக தீப ஆராதனை காட்ட திருவிழா இனிதே முடிவுறும்.

அனைவரும் வருக. அய்யன் அருள் பெறுக.

சிங்கம்பட்டி அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் கோயிலில் பல நூற்றாண்டுகளாய் மூன்றுநாள் திருவிழாவாக சிறப்பாக நடந்து வரும் மாசி மாத மகா சிவராத்திரி திருவிழாவிற்கு  காட்டுப் பாதை வழியாக நடை பயணமாகவே, சாமி கொண்டாடியால் தனியாகவே சங்கிலி எடுத்து வரப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச் சென்ற வயதான முதிய சாமி கொண்டாடி இரவு நேரமாகியும் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோயில் நிவாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் சென்றுவிட்ட அந்த பெரியவரை ஆடு ஒன்று  வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தது. பின் திருவிழா முடியும் வரை கோயிலில் சங்கிலி பூதத்தாரின் பிரமாண்ட பீடத்தின் அருகிலே இருந்த அந்த ஆடு பின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது. சங்கிலி பூதத்தாரே ஆடு வடிவில் வந்து சென்றதாக  நெல்லை மாவட்ட  அனைத்து பத்திரிக்கை பதிப்புகளிலும் பரபரப்புச் செய்தியாக வந்தது. வேட்டையாடும் கொடும் மிருகங்கள் வாழும் கடும்காட்டில்  ஆடு அலைவது என்பது ஆச்சரியமான அதிசயமாகும்.

எல்லாம் அய்யன் அருள்.

சிவ மயம். விஷ்ணு சகாயம்.

புதன், 6 பிப்ரவரி, 2019

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வென்னி உடையார் சாஸ்தா

ஸ்ரீ புலிமாடசாமி துணை

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

சிங்கம்பட்டி ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் தேவரின் ஐந்து புதல்வர்களில் முதல் இருவர் சந்ததிகள் இராதாபுரத்திலும் மூவர் சந்ததிகள் கீழ்ப்புலியூர் ,கருங்காடு, கோபாலசமுத்திரம் ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்...

மூத்தவர் ஸ்ரீ பெரியணைந்த பெருமாள் தேவர் குடும்பத்திற்கு பிரம்மராட்சகை அம்மனும்

நடுவர் குடும்பத்திற்கு முன்னடி, முருகன் இருளமாடன் ,சிவனணைந்த பெருமாள் போன்ற தெய்வங்களும்

இளையவர் குடும்பத்திற்கு புலிமாடன், வில்லுமாடன் ,விடுமாடன், தவசி தம்புரான் சுடலைமாடன், போன்ற தெய்வங்களும் தனி பூசை செய்துக்கொள்ளும் உரிமை சேர்ந்தது....

மாடசாமி ,பேச்சியம்மாள் ,முப்பிடாதி போன்ற தெய்வங்களை பொதுவான முறையில் வணங்கினார்கள்....

இதில் மாடசாமி களக்காடு படலையார் குளத்திலும் பிரம்மராட்சகை அம்மன் போன்ற தெய்வங்கள் சிங்கம்பட்டியில் இருந்தும் பிடிமண் எடுத்து பூடங்கள் அமைக்கப்பட்டது....

இராதாபுரம் கல்யாணி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் வெட்டச்சென்றதற்காக கொடைவிழா நடக்கும் பொழுது இரண்டுகோட்டை நெல்லும் பூஜை பொருட்களும் மானியமாக வழங்கப்படுகிறது.....

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

ஸ்ரீ மாடசாமி துணை

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

சிங்கம்பட்டி ஜமீன் வகையறாக்கள்

பாகம்:-1

சுமார் 400-வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு மதுரை ஜில்லா திண்டுக்கல் தாலுக்கா சத்திரப்பட்டி என்ற ஊரில் #கொத்துத்தாலி மறவர் இனத்தை சேர்ந்த ஸ்ரீமான் சிவசுப்புத்தேவர் என்பவர் வாழ்ந்துவந்தார்....

இவருடைய மனைவி பெயர் மீனாட்சி அம்மாள் இவர்களுக்கு நான்கு புத்திரர்கள்..

சங்கரலிங்கத்தேவர்

மாடப்பத்தேவர்

வன்னியபெருமாள்த்தேவர்

சின்ன மாடப்பத்தேவர் இவர்களுடைய

குடும்ப குலதெய்வங்கள்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன்

ஸ்ரீ தாமரையுடையார் சாஸ்தா

ஸ்ரீ மாடசாமி

இவர்கள் நான்குபேரும் வளர்ந்துவரும் காலத்தில் தங்களுடைய குலத்தெய்வங்களையும் பழனியில் உள்ள ஸ்ரீ முருகப்பெருமானையும் தரிசித்து வாழ்ந்து வந்தார்கள்...

ஒரு நாள் ஸ்ரீ முருக பெருமானை தரிசித்து விட்டு வரும் வழியில் தொண்டைமான் நகரத்தை ஆட்சி செய்துவரும் ஸ்ரீமான் புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ பாஸ்கர தொண்டைமானும் முருக பெருமானை தரிசிக்க வந்தார்..

தேவர் மக்கள் நால்வரையும் கண்டார்... இவர்களது உடல் பலம் வீர தீரத்தை கண்டு தனது அரண்மனைக்கு போர்ப்படை தளபதிகளாக இருக்க அழைத்தார்...

(கதை தொடர்ச்சி பாகம்: 2)

பாகம் :2

பாகம் :2

தேவர் மக்கள் நான்கு பேரும் சரி என்று சம்மதம் சொல்லி தனது அப்பா அம்மாவிடம் அனுமதி பெற்று தங்கள் குலதெய்வங்கள் உடன் அழைத்து சென்றார்கள்....

ஸ்ரீ துர்க்கை அம்மனை ஒரு வெண்கலப்பெட்டியிலும் ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ மாடசாமி உடன் புதுக்கோட்டைக்கு கூட்டி சென்றார்கள்..

தொண்டைமான் அரசவையில் போர்ப்படை முதன்மை தளபதிகளாக செய்து கொண்டு தங்கள் குலதெய்வங்களுக்கு பூஜை செய்து வாழ்ந்து வந்தார்கள்..

சில நாட்கள் சென்ற பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்கும் ஆவல் அவர்களுக்கு வந்தது அதன்படி தொண்டைமான் மன்னனிடம் உத்தரவு கேட்டார்கள்...

மன்னனும் சம்மதம் சொல்லி சீக்கிரம் சென்று வாருங்கள் என்று உத்தரவு கொடுத்தார்...

தேவர் மக்கள் நான்கு பேரும் தங்கள் குலதெய்வங்களை அழைத்து கொண்டு கன்னியாகுமரி கிளம்பினார்கள் வரும் வழியில் தங்குகின்ற இடமெல்லாம் தெய்வங்களை தரிசித்து வருகிறார்கள்...

பழனி முருகனை தரிசித்து விட்டு மதுரை வழியாக ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்கள்...

அடுத்து திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்தார்கள் அடுத்து விருதுநகர் வந்து சிவன்கோவிலில் தரிசனம் செய்தார்கள் ....

அடுத்து சாத்தூர் வழியாக இருக்கண்குடி சென்று ஸ்ரீமாரியம்மனை வணங்கினார்கள் அடுத்து கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவள்ளி அம்மனை தரிசித்தார்கள்....

அடுத்து கயத்தார் ஸ்ரீ அகிலாண்ட அம்மனையும் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவிலும் தரிசனம் செய்தார்கள்....

அடுத்து ஸ்ரீ செங்கலமுடையார் சாஸ்தாவை வணங்கி புதுக்குடி வந்து மேற்கு திசை நோக்கி திரும்பினார்கள்....

வரும் வழியில் ஸ்ரீ விட்லமுடையார் சாஸ்தாவை வணங்கி வழிப்பாட்டுக்கு செழியநல்லூர் வந்தடைந்தார்கள்....

வடக்கு செழியநல்லூர் அருகே ஒரு மைதானத்தில் தங்கினார்கள் சூரியன் மறைந்ததால் அம்மனை அங்கு வைத்து பூஜை நடத்த சித்ரா நதியில் குளிக்க வருகிறார்கள் .....

அதே நேரத்தில் செழியநல்லூர் நகரை ஆட்சி செய்து வரும் உக்கிர பாண்டியன் மன்னன் தேவர் மக்களை கண்டு அவர்களை பற்றி விசாரித்தார் ...

அவர்கள் நான்குபேரும் தங்களுடைய ஊர் மற்றும் வரலாறுகளை சொல்கிறார்கள் தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட போவதாக கூறுகிறார்கள்.

செல்லும் வழியில் பொழுது சாய்ந்ததால் வடக்கு செழியநல்லூரில் குளித்து முடித்து விட்டு அம்மனுக்கு பூஜை செய்ய இருக்கிறோம் என்று கூறினார்கள்.

அவர்களை உக்கிரபாண்டிய மன்னன் தன்னுடைய அரண்மணையில் தங்கும்படி வற்புறுத்தினார் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கும் வசதியும் மற்றும் வரலாறு பட்டயமும் செய்து தருவதாக கூறினார்.

மூத்தவர்கள் இருவரும் தங்க சம்மதித்தார்கள் இளையவர்கள் இருவரும் கன்னியாகுமரி செல்வதில் முடிவாக இருந்தார்கள் அப்போது வன்னியபெருமாள்த்தேவரும் சின்ன மாடப்ப தேவரும் அம்மனை தங்களால் தூக்கி செல்லமுடியாது நீங்கள் பூஜை செய்யுங்கள் அவர்கள் சென்றார்கள்..

தற்போது இளையவர்கள் சந்ததியினர் கன்னியாகுமரி அருகில் உள்ள தெற்கு கருங்குளத்தில் வாழ்ந்துவருகிறார்கள்..

மூத்தவர்கள் பெட்டி இருக்கும் இடத்தில்
ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ துர்க்கை அம்மனையும் வைத்து பூஜித்தார்கள் பின்பு ஸ்ரீ மாடசுவாமிக்கு தெற்கு செழிய நல்லூரில் கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா கோவிலில் உத்தரவு கேட்டார்கள்... செழியநல்லூர் ஊருக்கு மேற்கே கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா உத்தரவு கொடுக்க #ஸ்ரீசிவக்கொழுந்து (சிவனணைந்த பெருமாள்) ஸ்ரீ மாடசாமி ஸ்ரீ மாடத்தி அம்மன் ஸ்ரீ பேச்சி பிரம்மசக்தி அம்மன்
#ஸ்ரீபலவேசக்காரசுவாமி மற்றும் ஸ்ரீகோழி மாடசாமி போன்ற தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள்...

ஒவ்வொரு வருடமும் ஆனி ஆடி மாதத்தில் கொடைவிழா நடக்கும்பொழுது வியாழக்கிழமை சாயங்கால நேரத்தில் சித்ரா நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கும்பம் ஏற்றி குடி அழைப்பு பூஜை நடத்தி ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தாவை வணங்கி வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கல் வைத்து செங்கிடாய் பலிகொடுத்து சிவ கொழுந்து சுவாமியை பூஜை செய்து வணங்கி வெள்ளிக்கிழமை மதியவேளையில் பொங்கல் வைத்து ஆட்டுக்கிடாய் பலிகொடுத்து ஸ்ரீ மாடசாமியை பூஜை செய்து வணங்குவார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு வேளையில் புழுங்கல் அரிசியில் படையலிட்டு ஆடு மற்றும் கோழி கறி வைத்து ஆட்டு கிடாய் பலியிட்டு வில்லிசை மற்றும் மேளதாளங்களுடன் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள் ....

சனி, 2 பிப்ரவரி, 2019

சாஸ்தா ஆலய பரிவார பந்தி தேவதைகள்

சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி

சட்டநாதனின் ( சங்கிலிபூதத்தாரின் ) கீழ்

அணிவகுத்து அழகாய் நின்று பரிபாலிக்கும்

சாஸ்தா ஆலய பரிவார பந்தி தேவதைகள் :

1) கணநாதன் ( மஹாகணபதி )

2) நாகராஜக்கள்

3) சிவன் இணைந்த பெருமாள்
( இவரே காலப்போக்கில் மருவி
சிவணனைந்தப் பெருமாள் ஆகிறார் )

4) லாட சந்யாசி

5) தவசிராயர்

6) தவசி தம்புரான்

7) மாடன் தம்புரான்

8)முன்ன தம்புரான்

9) செல்லப் பிள்ளை ( சத்யகன் )

10) மேலவாசல் சங்கிலிபூதத்தார்

11) சட்டநாதர்

12) க்ஷேத்ர பாலர்

13) பெரும் பூதம்

14) கரும் பூதம்

15) கட்ட பூதம்

16) நட்ட பூதம்

17) ஒட்ட பூதம்

18) இடமலை பூதம்

19) வெள்ளக்கல் பூதம்

20) குண்டாந்தடி பூதம்

21) காஞ்சார பூதம்

22) இலங்காமணி பூதம்

23) நாகமணி பூதம்

24) பாதாள பூதம்

25) ஊமை பூதம்

26) ஆனந்த பூதம்

27) கருஞ்சடை பூதம்

28) பெரும்படை பூதம்

வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியாருக்கும் சிங்கம்பட்டி மறவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்கள்

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் வேலு நாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் தாயாரும், மனைவியும் வேலுநாச்சியார் பிறந்த ராமநாதபுர சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே.

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து பின் அவர் மறைவிற்குப் பின் சிவகங்கை சமஸ்தான ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆங்கிலேயர்களை வென்று அரியணை ஏறியவர் வீரமங்கை வேலுநாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் மகள் சிவகங்கை சமஸ்தான T.S..கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜாவிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களது மகளான திருமதி.T.S.K. மதுராந்தகி நாச்சியாரே தற்போதைய சிவகங்கை சமஸ்தானத்தின் ராணி ஆவார்.

1986 முதல் சிவகங்கை சமஸ்தான ராணியாக இருந்து வரும்  டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் சிலகாலம் தனது தாய்வழி தாத்தாவான நமது ராஜாவின் அரவணைப்பில் சிங்கம்பட்டி அரண்மனையில் வளர்ந்தவர் ஆவார். மேலும் தாய்மாமனான சிங்கம்பட்டி இளைய ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்தார் T.N.S முருகதாஸ் தீர்த்தபதியார் -சேதுபர்வதவர்தினி நாச்சியாரின் தவ புதல்வர் மதிப்பிற்குரிய 32-வது சிங்கம்பட்டி பட்டத்துக்காரர் T.N.S.M.சங்கர ஆத்மஜன் ராஜாவை மணந்துள்ளார்.

சிங்கம்பட்டி - சிவகங்கை இரண்டு சமஸ்தானங்களுக்கும் ராணியான வாழும் வேலுநாச்சியார் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் கம்பீரமான தோற்றம் கொண்டவர். யாருக்கும் அஞ்சாத ஆளுமைத் திறன் கொண்டவர். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் தேவஸ்தான கோவில்களை சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறார் எமது இளைய ராணி.

திருக்குறுங்குடி இறைவன்

திருக்குறுங்குடி இறைவன்

ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ஸ்வாமி
குளுமை வாய்ந்த களக்காடு மலை வந்திறங்கி
சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி ஸ்நானம் செய்து
தேக உஷ்ணத்தை தணித்து
ஆற்றங்கரை பாறையில்
சங்கிலியால் ஓங்கி அடித்து
ஒரு கசத்தை உருவாக்கி
நம்பியாற்றின் கரையில்
மூன்று நிலையங்கள் அமைத்து அமர்ந்தார்

சங்கிலியால் ஓங்கி அடித்த சப்தத்தால்
கடும்பாறை ஆனது
பொடிப் பொடியாகி
கசத்தில் நம்பியாற்று நீர்
பொங்கி வரும் பிரவாகமாய்
பெருக்கெடுத்து சலசலத்து
ஓடும் சப்தமதை கேட்டு
மலை நம்பி பெருமாள்
கோவிலை விட்டு வெளிவந்து
பூதத்தாரை நீர் யார் என்று வினவ
சட்டநாதன் ஆன சங்கிலி பூதத்தாரும்
யாம் சிவபுத்திரன்
பார்வதி தேவி என் அன்னை
நீங்கள் என் தாய்மாமா
நான் உங்கள் மருமகன் என்றே இனிதே செப்பி
அனைத்து விவரங்களும் கூற
பெருமாளும் தாயாரும்
அகமகிழ்ந்து பூதத்தாரின் வயிற்றுவலியை குணமாக்கி ஆசி வழங்கி
திருக்குறுங்குடியில் உள்ள
கீழ்நம்பி கோவிலுக்கும் ஊருக்கும் காவலாக இருக்க சொல்லி அனுப்பினர்

ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட
கீழ்நம்பி பெருமாளும்
பூதத்தாருக்கு
திருக்குறுங்குடி கோவிலையும் ஊரையும் சுற்றி
ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்திய பூசைகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்
அவை என்னென்ன நிலையங்கள் என்றால்

1) கோவிலிலே ஒரு நிலையம்

2) குடவரை வாயிலில் ஒரு நிலையம்

3) பிரதான வாயிலில் ஒரு நிலையம்

4) மடப்பள்ளியில் ஒரு நிலையம்

5) தெற்கு மதிலில் ஒரு நிலையம்

6) அமரேத்து மண்டபத்தில் ஒரு நிலையம்

7) தேரடியில் ஒரு நிலையம்

இப்படியாக ஏழு நிலையங்கள் எழுந்தருளி
அமர்ந்தார் எங்கள் இறைவன்

சட்டநாதா சரணம்