திங்கள், 26 நவம்பர், 2018

தூக்குத்துரை உண்மை கதை

தூக்குத் துரை உண்மை கதை
ஆனந்த விகடன் பொக்கிஷம் 07-Mar-2012

திருநெல்வேலி ஜில்லா சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரியசாமி தேவருக்கு அன்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை; இருப்பும் கொள்ளவில்லை.

அன்று மதுரையில் இருந்து வந்த கடிதம்தான் அவரை அப்படி நிலைகுலையச் செய்துவிட்டது. அதை மீண்டும் படித்துப் பார்த்தார். 'மகராஜாவுக்கு - உங்கள் அடிமை ராமசாமி எழுதியது. அடியேன் இப்போது மதுரை ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறேன். கொலை செய்ததாகவும் கொள்ளையடித்ததாகவும் என் மேல் குற்றம்சாட்டித் தூக்குத் தண்டனை கொடுத்துவிட்டார்கள். அடுத்த மாசவாக்கில் என்னைத் தூக்கில் போடுவார்கள்போலத் தெரிகிறது. மகாராஜாவுக்கு இதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.’ படிக்கப் படிக்கப் பெரியசாமிக்கு ஆத்திரம் பொங்குகிறது. 'கொண்டு வா குதிரையை’ என்று கர்ஜித்து, குதிரையில் ஏறிப் புறப்பட்டார்.

அந்தப் பகுதி ஜமீன்தார்களுக்குள்ளேயே கொஞ்சம் வித்தியாசமானவர் இவர். வயசு 27தான்.  திருமணமும் செய்துகொள்ளவில்லை. ஆஜானுபாகுவான உருவம்; வளமான ஜமீன், இள ரத்தம் வேறு; பிறகு கேட்க வேண்டுமா என்ன, பிடிவாதத்துக்கும் திமிருக்கும். புலிப் பால் வேண்டும் என்று அவர் விரும்பினால், அது வந்தே ஆக வேண்டும். அப்படி ஒரு குணம் ஜமீன்தாருக்கு.

வட நாட்டு சேட்டுகளோடு நமது ஜமீன்தாருக்குப் பழக்கம் அதிகம். அவர்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவை அவருக்கு அத்துப்படி. சேட்டுகள் பேசுவதுபோலவே இந்தி கலந்த கொச்சைத் தமிழ் பேசுவார். எனவே, ஒரு பெரிய சேட்ஜிபோல் உடை உடுத்தி 'அசல்’ சேட்டுபோல மதுரை வந்து சேர்ந்தார். அங்கே தனியாக ஒரு மாளிகை அமர்த்திச் சில நாட்கள் தங்கியிருந்தார்.

மதுரை ஜெயிலர் நானாசாகிப். இவர் ஒரு பட்டாணி. இவரைத் தன் நண்பராக ஆக்கிக்கொண்டார் ஜமீன்தார். அடிக்கடி ஜெயிலரின் வீட்டுக்குப் போவது, பரிசுகள் கொடுப்பது, ஜெயிலுக்குப் போவது, அங்குள்ள உதவியாளர் களிடம் பேசுவது, கைதிகளைப் பார்ப்பது, அவர்களுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பது, இங்கிலீஷ் தெரிந்தவர்களிடம் இங்கிலீஷிலும் இந்தி தெரிந்தவர்களிடம் இந்தியிலும் பேசுவது - இப்படி மதுரை ஜெயிலில் நமது 'சேட் ஜமீன்தார்’ ஒரு முக்கியப் புள்ளிஆகிவிட்டார்.

இதற்கிடையில் கைதிகளுக்கு இனிப்புக் கொடுக்கும் சாக்கில் நண்பர் ராமசாமியைப் பார்த்துத் தான் வந்திருப்பதையும் காட்டிக்கொண்டார்.

அப்படி இப்படி என்று மாதம் ஒன்றாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் - அதாவது, ராமசாமியை ஜெயிலில் இருந்து கடத்திக்கொண்டு போய்விட வேண்டும்.

ஒரு நாள் மாலை வழக்கம்போல் ஜெயிலரும் சேட்டும் வைகைக் கரைக்குக் குதிரையில் போய் அங்கு மணலில் அமர்ந்து அரட்டையில் இருக்கின்றனர். மெதுவாக இருட்டிக்கொண்டு வருகிறது. அப்போது, மெள்ள தான் யார் என்பதையும், மதுரை வந்த நோக்கத்தையும் பக்குவமாக வெளியிடுகிறார் ஜமீன்தார். இதைக் கேட்டு ஜெயிலர் திகைத்து நிற்க, ஜமீன்தாரோ தன் பணபலத்தையும் செல்வாக்கையும் அவருக்கு உணர்த்த - இதில் எல்லாம் மயங்காத ஜெயிலர், ஜமீன்தாரின் உறவை முறித்துக்கொண்டு கிளம்ப நினைக்கும்போதுதான் அந்த விபரீதம் நடக் கின்றது.

வார்த்தைகள் தடித்துக் கைகலப்புத் தொடங்குகின்றது. இதை முன்னமே எதிர்பார்த்து வந்திருந்த ஜமீன்தார், ஜெயிலரைக் கொன்றுவிடுகிறார். தான் யார் என்பதை அடையாளம் காட்டிய பிறகு இரண்டில் ஒன்றை முடித்துத்தானே ஆக வேண்டும்? தான் வந்த குதிரையின் சேணத்துடன் ஜெயிலரின் உடலைக் கட்டி வைகை மணலில் புதைத்துவிட்டு அவசரமாக ஜெயிலுக்கு வருகிறார்.

அங்குள்ளவர்கள் அனைவரும் அவருடைய சிநேகிதர்கள் ஆயிற்றே! அதிலும் அன்று தனக்குப் பிறந்த நாள் என்று சொல்லிவைத்துஇருந்தார். ஒவ்வொருவருக்கும் சந்தோஷமாக ரூபாய்களை அள்ளி வீசுகிறார். ராமசாமியைப் பார்க்க வேண்டும் என்று ஜமீன்தார் சொல்ல, அவர்களும் வழக்கம்போல் அவரைத் திறந்துவிட, அவரோடு சில விஷயங்கள் பேச வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவரை சிங்கம்பட்டிக்கே கடத்திக் கொண்டுவந்துவிட்டார் ஜமீன்தார்.

மறுநாள் மதுரை எங்கும் ஒரே பரபரப்பு. 'ஜெயிலர் நானாசாகிப்பைக் காணவில்லை. தூக்குத் தண்டனைக் கைதி ராமசாமி தேவரை, வட நாட்டு சேட்டு கடத்திக்கொண்டு போய்விட்டார்!’ இதுவே எங்கும் பேச்சு. குதிரைச் சேணத்துடன் அவசர அவசரமாக வைகை மணலில் புதைக்கப்பட்ட ஜெயிலரின் உடலை நாய்கள் வெளியே இழுத்துப்போட, சேணத்தின் உட்பக்கம் எழுதப்பட்டு இருந்த சிங்கம்பட்டி சமஸ்தான முத்திரையைக்கொண்டு 'இவ்வளவு நாட்களும் நாடகமாடியவர் வட நாட்டு சேட்டு இல்லை - சிங்கம்பட்டி ஜமீன்தாரே’ என்ற உண்மை தெரியவருகிறது. பிறகு என்ன? ஜமீன்தார் கைதுசெய்யப்படுகிறார்; வழக்கு நடக்கின்றது. தூக்குத் தண்டனை கிடைக்கின்றது.

கொலைசெய்யப்பட்ட ஜெயிலர் நானா சாகிப்பின் மனைவி அப்போது திருநெல்வேலி கலெக்டர் துரைக்கு ஒரு வேண்டுகோள் விடுக் கிறார். 'ஜமீன்தார் பெரியசாமியை அவருடைய குடிபடைகள் அனைவரும் கூடியிருக்கும்போது, அவர்கள் அனைவரின் முன்னிலையில் சிங்கம் பட்டியிலேயே பட்டப்பகலில் தூக்கிலிட வேண்டும்’ என்று. அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஏ.சி. ராக்டன் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்.

7.10.1834. சிங்கம்பட்டியே அல்லோலகல்லோலப்பட்டது. பக்கத்துப் பட்டிகளில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள். ஜமீன்தார் பெரியசாமியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 'உப்பைத் தின்றவன் தண்ணியைக் குடித்துத்தானே ஆக வேண்டும்? எனக்கென்ன... பெண்டாட்டியா, பிள்ளையா? ஒரு சிநேகிதனைக் காப்பாற்ற நான் செய்தது சரிதானே?’ என்று நினைத்தபடி, கம்பீரமாக நடந்து தூக்கு மரத்துக்கு வருகிறார். ஜமீன்தாரால் தூக்குமேடைக்குப் போக முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அப்போது ஜமீன்தார் ''எனக்குச் சிலம்பம் தெரியும். ஒரு கம்பு (கழி) கொடுத்தீர்கள் என்றால், சிலம்பம் ஆடிக்கொண்டே இந்தக் கூட்டத்தை விலக்கித் தூக்கு மேடைக்குப் போய்விடுகிறேன்'' என்று சொல்ல, அவருடைய துணிச்சலைக் கண்டு அதிசயப்பட்டு, அதிகாரிகள் திகைத்தனர்.

ஜமீன் அழிந்துபோகக் கூடாது என்று நினைத்த பிரிட்டிஷ் அரசாங்கம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, அந்தமானுக்கு அவரை அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு கலெக்டர் கைக்கு கடைசி நேரத்தில் வந்து சேர்கிறது.

கலெக்டர், இவர் மன்னிப்பு கேட்பார் என்று எண்ணி!
''சரி! உங்கள் கடைசி விருப்பம் என்ன?''
" என்னிடம் மன்னிப்பு கேல் துகிலடாமல் விட்டு விடுகிறேன்"  என்று சொல்ல,

ஜமீன்தாரோ
" நீ யாருடா என்னை மன்னிக்க" 
என்று சொல்லி, அவரது முகத்தில் துப்பி விட்டார்!

அவமானப்பட்டுப்போன கலெக்டர் ராக்டன் தூக்கு இரத்து ஆன அரசாங்க உத்தரவை மறைத்து, உடனே ஜமீன்தாரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கிறார். ''அந்தத் தூக்கு மரத்தில் இருந்து ஜமீன்தாரின் உடலைக் கீழே இறக்கக் கூடாது; கழுகுகள் கொத்தித் தின்னட்டும்'' என்று ஆணையும் பிறப்பித்துவிடுகிறார். ஆணை நிறை வேற்றப்படுகின்றது.

இப்போது ஜமீன் இல்லை. ஆனால், சிங்கம் பட்டியும் அதன் அழகான அரண்மனையும் இன்றும் இருக்கின்றன. தூக்கிலிடப்பட்ட பெரியசாமியை 'தூக்குத் துரை’ என்றுதான் சொல்லுகிறார்கள். அவருடைய சிலை அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருக்கிறது. தூக்கிலிடப்பட்ட இடம் 'தூக்கு மரத்து வயல்’ என்ற பெயரோடு இன்றும் இருக்கிறது. தூக்குத் துரையின் ஆவியை அடிக்கடி பார்ப்பதாக அங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். #தூக்குத்துரை  #தூக்குதுரை
#thookudurai

சுவாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் வரலாறு*

ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, தன்னோட பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன.

கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத  பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால்  பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். ‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை அறிந்த சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா கைலாயத்தில் சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். உனக்கு ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம்.  நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை  அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
கைலாயத்திலிருந்து பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அங்குள்ள ஓங்கி வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் அமர்ந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் அமர்ந்திருந்த சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது.

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய் மாறி கப்பலினையும், செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார். ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் திருச்செந்தூர் வந்த பூதத்தாரை அமைதிப்படுத்திய சகோதரரான சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும், பக்தர்கள் தங்கும் மடங்களிலும் , கடற்கரையில் நாழிக்கிணற்றிலும், மற்றும் ஊருக்கு உள்ளேயும், வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கும், வரும் பக்தர்களுக்கும், காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.  கைலாயத்திலும்,பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும், நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி வந்துவிட முருகரிடம் கூறிவிட்டு, தவறு செய்த தர்மகர்த்தாவையும் கண்டித்து விட்டு குளுமையான இடமான களக்காடு மலைக்கு வந்து, சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி குளித்து, உடல் சூட்டை தணிக்க வசதியாக, ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஓங்கி அடித்து ஒரு கசத்தை உருவாக்கி நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து  அமர்ந்தார். சங்கிலியால்  ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடிபட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த மலை நம்பி பெருமாள் ' யார், என்னவென்று விசாரிக்க, பூதத்தாரும், ‘நான் சிவனின் பிள்ளை. நீங்கள் என் மாமா, நான் உங்களது மருமகன்’ என்று எல்லா விபரமும் சொல்ல பெருமாளும், தாயாரும் பூதத்தாரின் வயிற்றுவலி நோயை குணமாக்கி, ஆசிர்வாதம் செய்து, திருக்குறுங்குடியில் உள்ள கீழ்நம்பி கோயிலுக்கும், ஊருக்கும் காவலாக  இருக்கச்சொல்லி அனுப்பினார்கள். அன்போடு அழைத்து, ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட கீழ்நம்பி பெருமாளும் பூதத்தாருக்கு திருக்குறுங்குடி கோயிலையும், ஊரையும் சுற்றி ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்யபூஜைகளுக்கும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். கிட்டுநாபுரத்தில் வசித்து வந்த தொழுநம்பி என்னும் பூசாரி கீழ்நம்பி கோயில் பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் பூஜை, செய்து  வந்தார். அவரது மனைவி ருக்மிணியம்மாளும் சிறந்த பக்தை.பதிவிரதை. ஆச்சி, ஐயர் இருவருக்கும் எல்லா வளங்களையும் கொடுத்த இறைவன் குழந்தை வரம் மட்டும் கொடுக்கவில்லை. தொழுநம்பி தவமாய், தவமிருந்து, குழந்தை வரம் வாங்கினார். பிறந்த குழந்தைக்கு காதில் சிறுவெட்டு போன்ற குறை இருந்ததால் 'குண்டல வாசகம்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். பள்ளி செல்லும் வயது வந்ததும் திண்ணைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். அந்த காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த கோயிலுக்கு காலையில் செல்லும் தொழுநம்பியானவர் நடையை திறந்து மூன்று கால பூஜைகளையும் முறையாக நைவேத்தியங்களோடு செய்து விட்டு அந்தி பூஜை முடித்தபின் கோயில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.அதன்பின் கோவில் காவல் தெய்வமான சங்கிலி பூதமானவர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறுநாள் காலையில் பெருமாள், தாயாரின் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் கதவின் உள்பூட்டு,தாழ்பாள்களை விலக்கி விடுவார். ஒருநாள் குழந்தை குண்டலவாசகம் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையானவன் தூரத்தில் தொழுநம்பி கோயிலுக்கு புறப்பட்டு செல்வதை கண்டு அவனும் தொடர்ந்து ஓடினான். ‘அப்பா,அப்பா’ என்று அழைத்தவாறு அன்பு மகன் ஓடி வருவதை பாதி வழி தூரம் தாண்டியபின் தான் தொழுநம்பி கவனித்தார். ஆஹா,இவனை மறுபடியும் கொண்டு போய் வீட்டுக்கு வந்தால் பூஜை நேரம் தப்பி விடுமே. அப்படிச் செய்தால் அது பெரும் குற்றமாயிற்றே என்றெல்லாம் குழம்பி பின் தெளிந்தவனாக குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோயில் நோக்கி சென்றான்.

கோயில்நடை திறந்து குழந்தையை ஒரு ஓரமாக உட்கார்ந்து விளையாடச் சொல்லிவிட்டு தனது வேலைகளில் இறங்கினார். வெகுதூரம் நடந்து வந்ததால் தாகத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையானவன் ‘அப்பா,குடிக்க ஏதாவது கொடு’ என்று கேட்க நம்பியும் சுவாமிகளின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை மகனுக்கு கொடுத்தான் குழந்தை 'பசிக்கிறது' எனக் கேட்க பூஜைக்கு வைத்திருந்த பழத்தினை குழந்தை குடித்து மீதி வைத்திருந்த பாலுடன் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி ஊட்டி விட்டான். குழந்தை குண்டலவாசகமானவன் நடந்து வந்த களைப்பாலும், பால், பஞ்சாமிர்தம் உண்ட அலுப்பினாலும் ஓரமாய் படுத்து தூங்கி விட்டான். வழக்கம்போல செய்யும் முறையான பூஜை போல் அல்லாமல் பால், பழமின்றி பெருமாளுக்கும், தாயாருக்கும், பூதத்தார் உள்ளிட்ட ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்,தேவதைகளுக்கும் ஒப்பிற்கு பூஜை செய்தான். தொழுநம்பியானவன் குழந்தை கூட வந்ததையும், கோயிலினுள் தூங்கி கொண்டிருப்பதையும் மறந்து கதவை பூட்டிவிட்டு வழக்கமான பாதையில் நடந்து வீட்டை அடைந்தான்.

வீட்டிற்கு வந்து கை, கால், முகம் கழுவி ஆசனப்பலகையில் அமர்ந்து ருக்மிணியம்மாள் எடுத்து வைத்த உணவை பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைக்கப்போனவன், ‘குழந்தை குண்டலவாசகனையும் சாப்பிடக் கூப்பிடேன்.சேர்ந்து சாப்பிடுகிறேன்’ என்று கூற,  ‘காலையில் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் கூட வந்ததாகத்தானே அவனது நண்பர்களும், செல்லும் வழியில் கண்டவர்களும் கூறினார்கள். எங்கே மறுபடியும் வந்து தெருவில் விளையாடிக் கொன்டிருக்கிறானா’ என்று ருக்மிணி ஆச்சியானவள் எதிர் கேள்வி எழுப்பினாள்.

அதன்பின்னரே கோயிலிலேயே குழந்தையை விட்டு வந்தது நினைவிற்கு வர மனைவியிடம் மெதுவாக விபரம் கூறி ‘ பயப்படாதே, குழந்தையை பெருமாளும், தாயாரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். விடிந்ததும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.’ என்று கூற  கொதித்து எழுந்த  அந்த தாயோ ‘தவமாய்,தவமிருந்து பெற்ற குழந்தையை கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் விட்டு வந்து விட்டு காலையில் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி பெற்றவள் என் வயிறு துடிக்கச் செய்கிறாயே. நீயெல்லாம் ஒரு தகப்பனா.. நீ இப்போதே சென்று என் குழந்தையை அழைத்து வரவில்லை என்றால் நானே செல்வேன். அல்லது உடனே என் உயிர் துறப்பேன்…’ என்று மேலும் பல கடுஞ்சொற்கள் பேசி நம்பியை கலங்க அடித்தாள்.
கோயிலுக்கு மீண்டும் நம்பி வந்த காரணம் அறிந்த சங்கிலி பூதத்தாரும் ‘ நம்பி , நீ வந்த காரணம் யாம் அறிவோம். ஆனால் ஆகம விதிப்படி கோயில் கதவைப் பூட்டி, பெருமாளும், தாயாரும் பள்ளியறைக்கு சென்ற பின் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிக்கு பின் தானே கோயில் கதவை திறக்க முடியும். உன் மகனை இப்போது இருப்பதை விட இரண்டு பிடி சேர்த்து வளர்த்து நிறைந்த கல்வியோடும், குறையாத செல்வத்தோடும் அவன் பெருவாழ்வு வாழும் வகையில் ஆசி வழங்கி நாளை காலையில் திருப்பி தருகிறேன்.வீடு சென்று இல்லாளை ஆறுதல் கூறி சமாதானப்படுத்து.’  என்று தேறுதல் வார்த்தைகள் கூறினார்.

ஆனால் சமாதானமடையாத நம்பியானவன் தன்னிடமிருந்த சாவி கொண்டு கோயில் நடை திறக்க முனைந்தான்.

‘நம்பியே… இன்று காலையில் இருந்தே பல விதிமீறல்கள் செய்து வந்தாய். உன் மகன் பொருட்டு அனைத்தையும் மன்னித்தோம்.ஆனால் இப்போது நீ செய்ய முயல்வது மன்னிக்கமுடியாத தவறு. உடனே இவ்விடம் விட்டு புறப்படு’ என்று பூதத்தார் எச்சரித்தார்.

மனம்பிறழ்ந்த நம்பியோ, மந்திரத்தினால் கோயில் கதவின் உள்ளிருந்த மேல்தாழ்ப்பாளை விலக்க, பூதத்தாரோ கீழ்தாழ்ப்பாள் போட்டார். அவன் கீழ்தாழ்ப்பாள் விலக்கும்போது பூதத்தார் தந்திரமாக மேல்தாழ்ப்பாள் போட்டார்.

இப்படி மாறி, மாறி தடுத்தும் தொழுநம்பியானவன் மந்திர வேலைகளின் மூலம் மீண்டும், மீண்டும் கோயில் கதவைத் திறக்க முயற்சிக்க கடும்கோபமும், ஆக்ரோஷமும் கொண்ட சங்கிலி பூதத்தார், ‘சரி நம்பி. கதவருகே வந்து உனது மேல் துண்டை விரித்து நில். உன் மகனைத் தருகிறேன். உன் விருப்பப்படியே வாங்கிச் செல்’. என்று கூறி எப்படி நம்பியானவன் பாலிலே, பழத்தை பிசைந்து பஞ்சாமிர்தம் ஆக்கினானோ அதுபோல பூதத்தாரும் தூங்கிக் கொண்டு இருந்த அந்த பச்சிளம் பாலகனை, பால் மணம் மாறா குழந்தையை, கை வேறு, கால் வேறாக பிய்த்து,ரத்தமும், சதையுமாக  பிசைந்து கதவு சாவித்துவாரம் வழியாக கோவிலுக்கு வெளியே வீசினார்.

என்ன காரியம் செய்தாய்..என்னை பழிவாங்க என் மகனையா கொன்றாய்.. பொழுது விடிவதற்குள் உன்னை மந்திர மை, மருந்துப் புகை போட்டு பிடித்து பாதாளக் குகையில் அடைத்து என் அடிமை ஆக்குகிறேன் பார்’ என்று சூளுரைத்து சபதம் செய்தான்.

‘ஏய் நம்பி. யாரிடம் சபதம் செய்கிறாய்.இப்போது கூறுகிறேன் கேள். உன் கண் முன்னே இந்த ஊர் நீங்கிச் செல்வேன். அதற்கு ஆதாரமாக ஆலயத்தின் அணையாவிளக்கு அணைந்திருக்கும். மேலும் கோயில் விருட்சமான மருதமரத்தின் வலது பக்கத்தையும், கோயில் கோட்டை மதில் சுவரில் உள்ள ஏழு வரிசைக்கற்களையும், சிதைத்து, சரித்து செல்வேன். அடையாளத்தை வந்து சரி பார்த்து கொள்.’என்று கூறி திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி பூதத்தான் குடியிருப்பு வழியாக களக்காடுமலை தாண்டி தென்பொதிகை மலை ஏறி காரையாற்றங்கரையில் உள்ள அருள்மிகு சொரிமுத்தையனார் கோயிலின் மூலவரும், தானே சுயம்பாக அவதரித்த மகாலிங்க சுவாமிகளின் அனுமதியோடு மணி முழுங்கி மரத்தடியில் வந்து குடியேறினார்.

இவ்வாறாக அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தாரானவர், தென்கைலாயமான பொதிகை மலை சொரிமுத்தையனார் கோயில் வந்து மணிமுழுங்கி மரத்தடி, மேற்கு வாசல், மூலஸ்தானம், மடப்பள்ளி மற்றும் வனத்தினுள்ளாக ஐந்து நிலையங்கள் அமைத்து சுயம்புலிங்கமான மகாலிங்க சுவாமி, விநாயகர், மூலசாஸ்தாவான பொன் சொரிமுத்து ஐயனார் மற்றும் கும்பாமுனி, பாதாளமுனி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசி மாடசுவாமி, தூண்டில் மாடசுவாமி, கரையடி மாடசுவாமி, பொம்மக்கா, திம்மக்கா சமேத பட்டவராயன், பிரம்மரட்சதை அம்மன், பேச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களோடு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.