செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீரைக் காத்த நீராவி சுடலை

வள்ளியூர்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அருள்மிகு ஐவராஜாக்கள் நீராவி சுடலை ஆண்டவர், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குளத்து நீரை காத்து நின்றார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை தலைநகராகக்கொண்டு மன்னன் குலசேகரப்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். இவர்களது தம்பிமார்கள் நான்கு பேரும் அண்ணனின் கட்டளையைஏற்று அவருக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களே ஐவர் ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். அம்மன் அருள்வாக்குப்படி கோயில் எழுப்பி மூன்று யுகம் கண்ட அம்மன் என பெயரிட்டு வணங்கி வந்தனர். கோட்டைக்குள் குளம் வெட்டியவர்கள், வள்ளியூர் பெரிய குளத்தில் இருந்து கள்ளமடை வழியாக கோட்டை குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்தனர். அந்தக் காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவதும், குளம் நிரம்புவதும், அது உடைபடாமல் இருப்பதும், வற்றாமல் இருப்பதும் தெய்வ காரியம் என்று நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தனர்.

அதன்படி நீர் வரத்துக்குரிய கள்ளமடைக்கு காவலும். நீர் வந்து சேரும் மடைக்கு காவலும் புரிய காவல் தெய்வம் வேண்டும் என்று குலசேகரப்பாண்டியன் தனது தளபதிகளிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தளபதி, மன்னா மடைக்காவலுக்கு மட்டுமல்ல கோட்டை நடைக்காவலுக்கும் காத்து நிற்கும் தெய்வம் பூதத்தார்தான். பொதிகை மலை அடிவாரம் சாஸ்தாவின் சந்நிதானம் சொரிமுத்தைய்யன் கோயில் சென்று அய்யனாருக்கு பூஜை செய்து, பரிவார தெய்வங்களுக்கு உரிய படையலிட்டு பூதத்தாரை அழைத்து வரலாம் என்றார். உடனே மலையாள நாட்டு நம்பூதிரிகளை வரவழைத்து நாட்குறித்து ஜமீனின் ஆலோசனையோடு சொரிமுத்தைய்யன் கோயிலுக்குச் சென்றனர். பூஜைகள் நடைபெறுகிறது.

அய்யன் உத்தரவு கிடைக்கப்பெற்று மேளதாளத்தோடு பூதத்தாரை அழைக்கின்றனர். அப்போது அசரீரி கேட்கிறது. ‘‘குலசேகரப்பாண்டியா, நான் தனித்து வருவதில்லை. என்னோடு இருக்கும் இருபத்தோரு தெய்வங்களும் உடன் வருவார்கள். நாங்கள் அனுதினமும் அய்யனை காணவேண்டும். அதனால் அவரை அழைத்துச்செல், அவருடன் அழைக்காமலேயே நாங்கள் வருவோம். எங்களுக்கு பெரிய அளவில் பூஜை செய்கின்றபோது முதலில் நாங்கள் இருக்கும் இவ்விடம் வந்து இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை அவ்விடம் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜையை தொடங்க வேண்டும்’’ என்றனர். அதன்படி ஆகட்டும் என்று பதிலுரைத்த மன்னன், சொரிமுத்தைய்யன் சந்நதியில் நின்று மன்றாடினார். அய்யனார் மனம் இறங்கி, ஒரு குடம் நீரில் உன்னுடன் வருவேன் என்று கூறினார். உடனே அர்ச்சகர் ஒருவரை கொண்டு வந்த வெள்ளி குடமதில் நீர் எடுக்கக் கூறினர். அந்தக் குடத்து நீரை வெள்ளை துணியால் மூடி வள்ளியூர் கொண்டு வருகின்றனர்.கோட்டைக்குள் கொண்டு வந்து குளத்து கரையதிலே, குடியமர்த்தி அய்யனாருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து வழிபட்டனர். கள்ளமடைக்கு காவலாய் கங்காள பூதத்தையும், குளத்து மடைக்கும், கோட்டை நடைக்கும் பூதத்தாரையும் காவலுக்கு வைத்தனர். குளத்தின் கரையில் சுடலை மாடனை நிலை நிறுத்தினர். அப்போது சுடலையின் பீடம் முன்பு வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து சத்தியம் செய்தபடி ‘‘ஐயா, இந்தக் குளத்தில் நீர் வற்றக்கூடாது மழையில் பெருகி, வெயிலில் ஆவியாகி வற்றும் மற்ற குளங்களைப்போல் இல்லாமல், இந்தக் குளத்து தண்ணீர் வெயில் காலங்களில் ஆவியாகி நீர் வற்றும் நிலை வராமல் காத்து நிற்க வேண்டும் அய்யனே’’ என்றனர். ‘‘சுடலை காவல் தப்பாது, கவலை வேண்டாம் நீர் ஆவியாகாது’’ என்றுரைத்தார் அசரீரியாக பேச்சி மகன் மாயாண்டி சுடலை.

ஆண்டுகள் கடந்த போதும் நீராவியாகாமல் குளம் வற்றாமல் காத்து நின்றதாலே இவ்விடத்து சுடலை, நீராவி சுடலை என்று அழைக்கப்பட்டார். ஐவராஜாக்கள் நிறுவியதால் இந்தக்கோயில் ஐவராஜாக்கள் நீராவி சுடலை ஆண்டவர் கோயில் என்று இப்போது அழைக்கப்படுகிறது. கோயிலைச்சுற்றி குடியிருப்புகள் உருவாகி விட்டன. தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து துணை நின்று காத்தருள்கிறார் நீராவி சுடலை ஆண்டவர். இக்கோயிலில் சொரி முத்தைய்யனார் அய்யனார் பெயரிலும், சங்கிலி பூதத்தார், அகத்தியர், பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், சிவனணைந்த பெருமாள், கரடி மாடன், தளவாய்மாடன், புலமாடன், தூசிமுத்துமாடன், பலவேசக்காரன், சுடலை மாடத்தி, கசமாடன், வண்ணாரமாடன், ஈனமாடன், முண்டன், பொம்மக்கா, திம்மக்காவுடன் பட்டவராயன் ஆகிய தெய்வங்கள் அருட்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. கொடை தோறும் குடியழைப்புக்கு பின்னர் சொரிமுத்தைய்யன் கோயில் சென்று தீர்த்தமும், அங்கிருந்து சங்கிலியும் வாங்கி வருகின்றனர். இது அய்யனாரையும், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தெய்வங்க. தலைமலையிலிருந்து தாமிரபரணி தண்ணீரை கொண்டு வருவதாகவும் கருதுகின்றனர். இக்கோயில் வள்ளியூர் தேவர் கிழத்தெரு வில் இரயில் பாதையின் மேல் பக்கம் அமைந்துள்ளது.... #சிங்கம்பட்டி*வகையராக்கு*பாத்தியப்பட்டது*

இவண்
*ஐவராஜாக்கள்*மண்ணில்பிறந்தவன்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக