ஊர்க்காடு, அம்பாசமுத்திரம்.
நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரத்திலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள நீர்வளமும், நிலவளமும் கொண்ட பகுதி ஊர்க்காடு ஆகும். இங்கு சேதிராயர் குல ஜமீன்தார்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ஊர்க்காடு ஜமீன் என்று அழைக்கப்பட்டனர்.
தொண்டை நாட்டிற்கும், சோழநாட்டிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ‘‘நடுநாடு’’ (சேதிநாடு) என்று அழைத்தனர். நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் சேதிராயர் என்ற அழைக்கப்பட்டனர். சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரித்து பார்த்தால் சேதி என்பது நாட்டின் பெயராகவும், அரையர் என்பது அரசர் என்று பொருள்படும்.
ஊர்க்காடு அருகேயுள்ள 18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஊர்க்காடு ஜமீன் ஆட்சி செய்து வந்தார். ஊர்க்காடு சிவன்கோயிலைக் கட்டியவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் சிவன் திருக்கோட்டியப்பர் என்ற நாமத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஊர்க்காடு முந்தைய காலத்தில் பூவை மாநகர் என்று அழைக்கப்பட்டது. இது நான்கு புறமும் வயல்காடுகளால் சூழப்பட்ட பகுதி. ஊரைச்சுற்றி வயக்காடுகள் நிரம்ப இருந்ததனால் ஊர்க்காடு என்ற அழைக்கப்படலாயிற்று.
ஒரு முறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் வெள்ளை துணியால் மூடப்பட்ட வெண்கல செம்பு ஒன்றும் வந்தது. அவை ஊர்க்காடு பகுதியில் பலா, களியல் உள்ளிட்ட மூன்று மரங்கள் ஒருங்கே நின்ற தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒதுங்கியது.
ஊர்க்காடு ஜமீனைச் சேர்ந்த சிற்றரசர்கள் சிவனைந்த பெருமாள் சேதுராயரும், கோட்டிலிங்க சேதுராயரும் தாமிரபரணி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அழகுடன் வடிவமைக்கப்பட்ட பிரம்பும், உருவத்தில் பெரியதாய் அதிக மணம் கொண்டிருந்த எலுமிச்சங்கனியும் ஆற்றில் மிதந்து வந்தது. அதனைக்கண்ட அவர்கள் பிரம்பையும், எலுமிச்சங்கனியையும் எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வருகின்றனர். பூஜை அறையில் கொண்டு வைத்தனர்.
சில வாரங்கள் கழிந்த நிலையில் ஊர்க்காடு பகுதியில் வாழும் ஆடு, மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மடிகிறது. மக்கள் நோயோடும், மழை, தண்ணி இல்லாத வறுமையோடும் அவதி பட்டனர். அவர்கள் ஜமீனிடம் வந்து முறையிட்டனர். உடனே கோட்டிலிங்க சேதுராயரும், சிவனைந்த பெருமாள் சேதுராயரும் தங்கள் குல தெய்வமான சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோட்டியப்பர் கோயிலுக்கு வந்தனர். சந்நதி முன்னே கண்ணீர் விட்டு மன்றாடினர். ஊரில் நடக்கும் குழப்பத்துக்கு காரணம் என்ன என்பதை காட்டு என் அய்யனே, தீ வினைகள் அகலனும். தீமைகள் விலகனும். நன்மைகள் வந்து சேரனும் திருக்கோட்டியப்பனே அருளனும் என்று முறையிட்டுக் கொண்டு அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியெங்கும் மன்னா இங்கே பார்த்துச் செல்லுங்கள். எங்களுக்கு கண்கண்ட தெய்வம் நீங்கள் தானே, என்ன பாவம் செய்தோம் ஏன் இந்த நோய், நொடியுடன் வாழ்க்கை என்று குடிமக்கள் அழுது புலம்புவதைக்கண்டு மன்னன் வேதனையுடன் அவர்களைப் பார்த்து, எல்லாம் திருக்கோட்டியப்பன் பார்த்துக்குவான் என்று அவர் நாமத்தை கூறி சமாதானப்படுத்தி வந்தனர். அரண்மனையில் வந்தமர்ந்த சில வினாடிகளில் அரண்மனை வாயில் பண்டாரம் ஒருவர், மன்னா, கலங்காதே, வந்த வினைக்கு காரணம் என்ன என்பதை சேரன்மகாதேவியில் குறி சொல்லும் குறமகள் பார்வதியை அழைத்து வந்து கேள் என்று கூறிச் சென்றார். இவர்கள் எந்த மாலையை திருக்கோட்டியப்பருக்கு படைத்து பூஜித்தார்களோ, அந்த மாலை வாயிலில் கிடந்ததை கண்டனர். வந்து சென்றது திருக்கோட்டியப்பர் என்பதை உணர்ந்தனர். பேராணந்தம் கொண்ட ஜமீன்தார்கள் பார்வதியை தேடி சேரன்மகாதேவி சென்றனர்.
குறமகள் பார்வதியை அழைத்து வந்து கேட்டனர். அவர், மன்னாதி மன்னர்களே, பிரம்பும், கனியும் எடுத்த இடத்தின் வடபுறம் மும்மர இடுக்கில் ஒதுங்கியிருக்குது ஒரு வெண்கல செம்பு. அதை வட திசை நோக்கி நின்று உடைத்துவிடு, உண்மை தெரியும். நன்மை வந்து சேரும் என்றாள். குறி சொன்ன பார்வதிக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பிய ஜமீன்தார்கள். வேகமாக பிரம்பும், கனியும் எடுத்த தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். அந்தி நேரம், பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை. அவள் கூறிய மும்மர இடுக்கில் வெண்கல செம்பு ஒன்று கரை ஒதுங்கியிருந்ததை கண்டனர். அதை இரு கரங்கள் சேர்த்து எடுத்து வடதிசை நோக்கி நின்று உடைத்தனர். புகை மூட்டம் தென்பட்டது. சற்று நேரத்திற்கு பின் தோன்றி ஒளியின் ஊடே கேரள மரபு கொண்டை யிட்டு, கறுப்பு நிறத்தில் மணிகள் கோர்த்து கட்டிய கச்சையோடு, வல கரத்தில் வீச்சருவாவும், இட கரத்தில் கதாயுதமும் தாங்கிய வண்ணம் சுடலைமாடன் காட்சி கொடுத்தார். தனக்கு ஒரு நிலையம் கொடுத்து வணங்கி வாருங்கள். நோயும் மாறும், வறுமையும் தீரும். எல்லா வளங்களோடு குடி மக்களை வாழவைப்பேன். உங்களுக்கு துணை நிற்பேன். நாளை நடப்பதை இன்றே நினைவூட்டுவேன். அச்சம் வேண்டாம், கோட்டியப்பன் மைந்தன் நான் என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு மறைந்தார்.
அதன் பின்னர் சுடலைமாடனுக்கு ஜமீன்தார்கள் கோயில் எழுப்பி கொடை விழா எடுத்து வழிபட்டு வந்தனர். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசு மற்றும் வம்சா வழியினர் கோயிலை புதுப்பித்து வழிபாடு செய்து வருகின்றனர். சுடலைமாடனும் தன்னை அடிபணிந்து வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்புரிந்து காத்து வருகிறார்.
ஊர்க்காடு சுடலைமாடன் கோயிலில் வெற்றி விநாயகர், தங்கமயில் முருகன், அங்காளபரமேஸ்வரி, பேச்சியம்மன், பிரம்மராக்கு சக்தி, முண்டன், மாஇசக்கி ஆகிய தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளன. மூலவராக சுடலைமாடன் வீற்றிருந்தாலும், முதல் பூஜை வெற்றி விநாயகருக்கு தான், அடுத்தது தங்கமயில் முருகனுக்கு, மூன்றாவதாக அங்காளபரமேஸ்வரிக்கும் அடுத்த பூஜை பேச்சியம்மனுக்கும் நடக்கிறது. அதன் பின்னரே சுடலைமாடனுக்கு பூஜை செய்யப்படுகிறது.
கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 3 நாள் கொடை விழா சிறப்பாக நடைபெறுகிறது. கோயிலை தேவர் சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.