ஜமீன் சிங்கம்பட்டி மூன்றாவதாக அரண்மனை இடம் பெயர்ந்த இடம் . இங்கு அகத்தியர் மற்றும் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.
காலம் காலமாக ஜமீன்தார்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து அகத்தியரையும், முருகப்பெருமானையும் வணங்கி கீர்த்தி பெற்றனர். இக்கோயிலில் முருப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகம் மிகப்பெரிய திருவிழாவாக, விமர்சையாக நடக்கும்.
முதல் நாளே ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விடுவார். மடப்பள்ளிக்கு மேல்புறம் உள்ள அறையில் தங்கி விரதமிருப்பார். சிறப்பு பூஜையில் கலந்து கொள்வார். முருகப்பெருமான் வீதி உலாவரும் சப்பரத்தை வழியனுப்பிவைப்பார். மிக பிரமாண்ட சுற்றுச் சுவருடன் இக்கோயில் உள்ளது. அதில் சிறப்பு மிக்க கல்தூண்கள் பல உள்ளன. ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர், வடக்கு நோக்கி உள்ளார். முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில் வார்டனைக் கொலை செய்தார்.
இந்த குற்றத்துக்காக ஆங்கிலேய அரசு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 17.10.1884ல் தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை! கந்த சஷ்டி விழாவின்போதும் ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விரதம் இருப்பார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரே அங்கிருந்து அரண்மனைக்கு கிளம்புவார். சிங்கம்பட்டி ஊர் மக்களும் ஜமீன்தாரின் கோயில்களை வணங்கி வளம் பெறுகின்றனர். தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களைக்கூட ஜமீன்தாரின் வாரிசுகள் மன்னித்து விடுவர்; ஆனால், தெய்வத்துக்கு எதிராக சதி செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக