புதன், 27 டிசம்பர், 2017

தூக்குதுரைதேவர் @ பெரியசாமிதேவர்

ஜமீன் சிங்கம்பட்டி மூன்றாவதாக அரண்மனை இடம் பெயர்ந்த இடம் . இங்கு அகத்தியர் மற்றும் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.

காலம் காலமாக ஜமீன்தார்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து அகத்தியரையும், முருகப்பெருமானையும் வணங்கி கீர்த்தி பெற்றனர். இக்கோயிலில் முருப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகம் மிகப்பெரிய திருவிழாவாக, விமர்சையாக நடக்கும்.

முதல் நாளே ஜமீன்தார்  கோயிலுக்கு வந்து விடுவார். மடப்பள்ளிக்கு மேல்புறம் உள்ள அறையில் தங்கி விரதமிருப்பார். சிறப்பு பூஜையில் கலந்து கொள்வார். முருகப்பெருமான்  வீதி உலாவரும் சப்பரத்தை வழியனுப்பிவைப்பார். மிக பிரமாண்ட சுற்றுச் சுவருடன் இக்கோயில் உள்ளது. அதில் சிறப்பு மிக்க கல்தூண்கள் பல உள்ளன.  ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர், வடக்கு நோக்கி உள்ளார். முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில்  வார்டனைக் கொலை செய்தார்.

இந்த குற்றத்துக்காக  ஆங்கிலேய அரசு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 17.10.1884ல் தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை! கந்த சஷ்டி விழாவின்போதும் ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விரதம் இருப்பார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரே அங்கிருந்து அரண்மனைக்கு கிளம்புவார். சிங்கம்பட்டி ஊர் மக்களும் ஜமீன்தாரின் கோயில்களை வணங்கி வளம் பெறுகின்றனர். தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களைக்கூட ஜமீன்தாரின் வாரிசுகள் மன்னித்து விடுவர்; ஆனால், தெய்வத்துக்கு எதிராக சதி  செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்

ஜமீன் கோயில்கள்

சிங்கம்பட்டி ஜமீன்தார் வாரிசுகள் தங்களுடைய அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தமது அலுவலுக்குத் தக்கவாறு மூன்று இடங்களில்  அமைத்திருந்தனர். அரண்மனை அருகே ஆலயங்கள் அமைத்து வணங்கி வந்தனர். அயன் சிங்கம்பட்டி பூதத்தார் கோயிலுக்கு பின்புறம் முதல் அரண்மனை  இருந்துள்ளது. தினமும் ஜமீன்தார் ஏவலர்கள் புடை சூழ மகாதேவர்  கோயிலுக்கு செல்வார். சிவனை மனமுருக வணங்கிய பிறகே அன்றைய  செயல்களைத் தொடங்குவர்.  அம்மையையும்,  ஐயனையும் திருவிழாக்காலங்களில்  பொன்னாலும் பூவாலும் அலங்கரித்து தங்களது தோளில் சுமந்து  வருவர். அரண்மனை இடம் மாறிய பிறகும்கூட இந்த வழக்கத்தை அவர்கள் விட்டு விடவில்லை. சிவபெருமான் உலகத்துக்குப் படியளக்கிறாரா  இல்லையா என்று  பார்வதி தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை சோதித்துப் பார்க்க ஒரு எறும்பை பிடித்து ஒரு ஜாடிக்குள் அடைத்து வைக்கிறார்.  படியளந்து விட்டு வந்த சிவபெருமானை பார்த்து, “ஐயனே எல்லோருக்கும் படியளந்து விட்ட நீங்கள், ஒரே ஒரு உயிர் மட்டும் பட்டினியால் கிடப்பதை   அறியவில்லையா?” என்று தேவி கேட்டார்.

சிரித்தார் சிவபெருமான்.  “தேவி, நீ எறும்பை அடைத்து வைத்திருக்கும் ஜாடியைத் திறந்து பார்,’’ என்றார்.பார்வதிதேவி திறந்து பார்த்தபோது, எறும்பு ஒரு  அரிசி மணியைத் தன் வாயால் பற்றியிருந்தது! ஈசன் எல்லா உயிருக்கும் படியளக்கிறார் என்பதை அம்பிகை புரிந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி, கார்த்திகை  6ம் தேதி வைக்கத் தஷ்டமி  விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் ஆலயத்துக்கு இணையானது இந்த  சிங்கம்பட்டி மகாதேவர் ஆலயம். சிவபெருமான் அன்னம் வழங்கும் இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் எல்லோருக்கும் அன்னம் வழங்கும்  அளவுக்குப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். தங்களது மக்களுக்கு வாரி வழங்கும் அளவுக்கு பொன் பொருள் கிடைக்க வேண்டும்  என்பதற்காகவே ஜமீன்தார்கள் மகாதேவர் ஆலயத்தில் இத்திருநாளில் இறைவனுக்கு அன்னம் படைத்து அன்னதானமும் செய்கிறார்கள். இதே ஊரில்  உள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலும் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது தான். இந்தக் கோயிலுக்கு கூரை கிடையாது. இங்கு மார்கழி மாதம்தோறும் சிறப்பு  பூஜைகள் நடக்கும். 

சித்திரை மாதம் கோயில் கொடை விழாவின்போது மூன்றாம் நாள் இங்கு ஜமீன்தார் தனது பரிவாரத்துடன் வருவார். அவருக்கு பரிவட்டம் கட்டி  திருவிழாவை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்துவர். இரண்டாவது அரண்மனை இருந்த இடம் ஏர்ம்மாள்புரம். மணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பச்சை  பசேலேன்று காணப்படும் வயல்வெளிகளுக்கு நடுவே இந்த ஊர் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் மலைகளை தழுவிச் செல்லும் வெண்மேகக்  கூட்டத்துடன் மணிமுத்தாறு அணை ரம்யமாய் காட்சி தரும். வெள்ளியை உருக்கி விட்டாற்போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 7 ஷட்டர்கள்  வழியாக கொட்டும். ஏர்ம்மாள்புரம் அரண்மனை அருகில் முப்பிடாதி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இவரை வணங்கிய பிறகே ஜமீன்தாரின்  முன்னோர்கள் தினமும் நகர் வலம் வருவர். இங்குள்ள முப்பிடாதி அம்மன் திரிபுர சுந்தரியின் அம்சம். ஜமீன்தார்கள் இவருக்கு ஒரு ஆலயம் அமைத்து  மூலவரை மரச்சிற்பமாக அமைத்து வணங்கி வந்தனர்.

புராதன சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்குள் பூசாரி மட்டும் நுழைந்து செல்லும் வண்ணம் நுழைவாயில் சிறியதாக இருக்கிறது. அம்மனின் கழுத்து, தோள்  மற்றும் வயிற்றை சுற்றியபடி நாகப்பாம்புகள்  காணப்படும். உள்ளே செல்லும் அர்ச்சகர் அம்மனை வணங்கி, “தாயே உனக்கு அலங்காரம் செய்து  ஆராதிக்க வேண்டும். தயவு செய்து நாகப் படைகளை அகற்று” என்று வேண்டி நின்றால்போதும். பாம்புகள் அம்மனை விட்டு இறங்கிச் சென்று விடும்.  அதன் பிறகே பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் செய்வார். முன்னூறு வருடங்களாக இது தொடர்கிறது! சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் முப்பிடாதி அம்மனை தங்களது அன்னையாகவே பாவித்தார்கள். திருவிழாக்காலங்களில் அம்மனுக்கு அலங்காரம் முடிந்து திரை விலக்கும்போது, முதல்  ஆளாக பக்தி பெருக்குடன் நிற்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு தாயார் காட்சியளிப்பார்.