சனி, 1 ஏப்ரல், 2017

தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவில் வரலாறு

  
தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவில்
நமது முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வரும் கோவிலை குலதெய்வ கோவில் என்கிறோம். பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு நடத்துவது சிறப்பானதாகும். வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும் அன்று குலதெய்வ கோவிலில் ஒன்று கூடி வழிபடுகின்றனர். அந்தவகையில் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகருங்குளம் பூசாஸ்தா கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற குலதெய்வ கோவிலாகும்.

வள்ளியூரை அடுத்து காவல்கிணற்றில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெற்கு கருங்குளத்தில் பை பாஸ் சாலையோரம் அமைந்துள்ளது பூ சாஸ்தா கோவில். பெயரில் பூவின் மென்மை இருந்தாலும் இந்த கோவிலின் வரலாறு சற்று அச்சம் தருவதாகவே உள்ளது.

மன்னர்கள் ஆண்ட காலத்தில் தெற்கு கருங்குளம் ஊரில் செல்வாக்கு மிக்க முதலியார் ஒருவர் இருந்தார். அவர் இந்த பூ சாஸ்தா கோவிலின் அருகில் இருந்த கல்லில் ஒரு செக்கை செய்து வீட்டிற்கு எடுத்து வர முயற்சித்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அந்த கல்செக்கு நகரவே இல்லை.

இதனால் முதலியார் குழப்பம் அடைந்தார். அப்போது அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர் மீது சாமிஅருள் வந்தது. பங்குனி உத்திரத்தில் நான் கேட்கும் படையலிட்டால் செக்கு நகரும் என சாமியாடி முதலியாரிடம் கூறினார். அதை ஏற்றுக் கொண்டு முதலியாரும் கோவிலில் சத்தியம் செய்து கொடுக்க செக்கு நகர்ந்தது.

அதன் பின் பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்ற முதலியார் சாஸ்தாவிடம் என்ன படையல் வேண்டும்? என்று கேட்க அப்போது அருள் வந்து ஆடியவர் கூறியதை கேட்டு முதலியார் அதிர்ந்து போனார்.

எனக்கு படையலாக நரபலி தரவேண்டும் என பூ சாஸ்தா கேட்க, சத்தியம் செய்து கொடுத்த முதலியார் செய்வதறியாது திகைத்தார். வேறு வழியின்றி தனது வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை முதலியார் நரபலி கொடுத்தார்.

இனி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்தரத்தன்று முதலியார் நரபலி கொடுப்பார் என அஞ்சிய ஊர்மக்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஊர்களுக்கு சென்றனர். இதனால் பூ சாஸ்தாகோவிலில் பூஜை இன்றி களையிழந்தது. வேறு ஊர்களுக்கு சென்ற மக்கள் பல்வேறு நோய்களால் வாதிக்கப்பட்டனர்.

இதற்கு ஒரு தீர்வுகாண நினைத்த மக்கள் மீண்டும் கோவிலுக்கு கூடிவந்தனர். பூ சாஸ்தாவிடம் அழுது தொழுது எங்களுக்கு ஒரு வழி காட்டு என வணங்கி நின்றனர். நரபலிக்கு பதிலாக ஒரு கோட்டை நெல்குத்தி ஒரே கொழுக்கட்டையாக செய்து பங்குனி உத்திரத்தில் படையலிட்டால் உங்கள் கஷ்டம் தீரும் என அருள்பாலித்தார் பூசாஸ்தா. அன்று தொடங்கி இன்றுவரை பங்குனி உத்திரம் அன்று மெகா கொழுக்கட்டை படையல் தொடர்கிறது. இதற்கான நெல்லையும் முதலியார் வீட்டில் இருந்து தான் பரம்பரை பரம்பரையாக கொடுக்கின்றனர்.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, ஆந்திரா, கேரளாவில், புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்குனி உத்திரம் அன்று கூடுகின்றனர்.

11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்த கோவில். மேலும் ஒரு அதிசயமாக இந்த கோவிலில் ஒரு மரம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் வருடங்களாக இந்த மரம் அங்கு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அந்த மரத்தின் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. பங்குனி உத்திரம் அன்று மட்டும் இந்த மரத்தில் ஒரு பூ பூத்து அன்றே உதிர்ந்து விடும் என்று அதிசயமாக கூறுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று பூசாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்று கோவிலில் உள்ள பூசாஸ்தா, சங்கிலி பூதத்தார், ஆலிபப்பம்பரத்தி, வன்னிய ராஜா, பொற்கலை புஷ்கலா, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடக்கின்றன.

அன்று 15 நாட்கள் விரதம் இருந்து 50 ஆண்கள் சேர்ந்து முதலியார் வீட்டில் இருந்து ஒருகோட்டை நெல் வாங்கிவந்து அன்றே குத்தி அந்த அரிசியை இடித்து மாவாக்குகின்றனர். மாவில் நீர்விட்டு பிசைந்து உருட்டி தட்டுகின்றனர். பின்னர் காட்டு கொடி நிரவி, அதன் மேல் இலைகளை பரப்பி உருட்டி தட்டிய மாவை அடுக்குகின்றனர். அதன்மீது சிறுபயறு, தேங்காய்த்துருவல் கலந்து பூரணத்தை வைக்கின்றனர். இப்படி மாறி மாறி அடுக்கிய பின்னர் காட்டுக்கொடியால் உருண்டையாக கட்டுகின்றனர். இப்போது மெகா கொழுக்கட்டை முழுவடிவம் பெறுகிறது.

அப்போது பூஜை முடித்து வரும் பூசாரிக்கு அருள் வருகிறது. அவர் சாமி ஆடியபடி மெகா கொழுக்கட்டையை தூக்கி அன்று வெட்டி எடுத்த உடை மரை விறகினால் ஏற்படுத்தப்பட்ட தணலில் போடுகிறார். 7 மணி நேரம் வேக வைத்து மெகா கொழுக்கட்டை தயாராகிறது. இதன் பின்னர் பூசாஸ்தாவிற்கு மெகா கொழுக்கட்டையை படைக்கின்றனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பூசாஸ்தாவை வணங்குகின்றனர்.