முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.
அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.
உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.
சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். "நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. விதி யாரை விட்டது. அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு மலைக்கு சென்றார்.
21 மாட்டு வண்டி
அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். அந்த வண்டி அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை. ஓடி.. ஓடிப் பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரம் ஒன்று இருந்தது.
''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார். ஆறுமுக ஆசாரி. அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது.
கோடாலி வெட்டு
அந்த 21 தேவரைகளையும் விரட்டி விட்டு கொடி மரத்தினை வெட்ட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயா. மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. உடனே அந்த கோடாரி மற்றவர்களின் கழுத்தில் பட்டது. அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.
ஐயோ நான் என்ன செய்வேன் என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கிடையில் 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.
சாஸ்தா
இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். ‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். பின் 21 மாட தேவதைகளையும் அந்த சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூரில் கொண்டு சேர்க்க உத்தரவிட்டார்.
அதன்படி 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. இப்போதும் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.
மேற்கண்ட தகவல் "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறினார். இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? கொடிமரம் பிரமாண்டமானது. அதை 21 மனிதர்கள் கொண்டு வர இயலாது. ஆனால் 21 மாட தேவதைகள் சேர்ந்து அந்த மரத்தினை 21 மாட்டு வண்டியில் தூக்கி வைத்து வரும் சம்பவம் ஒரு மலைப்பான சம்பவமாக இருந்தாலும் அதை நம்பி தீர வேண்டும்.
ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருக்காது. ஆனால் பொதிகை மலை சந்தனமரம், சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் திருச்செந்தூரில் கொடிமரமாக இருக்கும் செய்தி ஒரு வித்தியாசமான செய்தி தான்.
செவ்வாய், 28 மார்ச், 2017
திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை
Singampatti Zamin History
ஐயப்பனுக்கு மூலாதாரமாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வாகம் செய்பவர்கள் சிங்கம்பட்டி ஜமீன்தார்கள்தான். சிங்கம் பட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாரம்பரியம் மிக்க பழமையான ஜமீனாகும். மற்ற ஜமீன்தார்களுக்கு இல்லாத சிறப்பு இந்த ஜமீன்தாருக்கு உண்டு. ராஜ பட்டம் கட்டி வாழும் ஒரே ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது. இவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் புகழ் பெற்ற ஆலயம் தான் சொரிமுத்து அய்யனார் கோயில். ஐயப்பனின் மூல ஸ்தலமாக கருதப்படும் இந்த அய்யனார் கோயில் இவர்களது ஆளுகைக்குள் வந்தது சுவாரஸ்யமான வரலாறு. 1802ம் ஆண்டு பாளையக்காரர்களாக இருந்தவர்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஜமீன்தாராக மாற்றினார்கள். தங்களுக்கு வரி பிடித்துத் தருபவர்களாக இவர்களை நியமனம் செய்தனர்.
பல ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களிடம் அடிபணிந்தே வாழ்ந்தனர். தாங்கள் வரி பிடிக்கும் தொகையில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வீட்டு மீதி தொகையுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். பலர் இவ்வாறாக கிடைக்கும் பொருள் மூலம் தங்கள் பகுதியில் ஆலயங்களை கட்டி தினசரி பூஜைகளை செவ்வனே செய்தனர். ஆன்மிகத்தை பேணிக்காத்து தாங்களும் பெறு வாழ்வு வாழ்ந்தனர். 1857ல் நடந்த ஆயுதப் புரட்சியில் புலித்தேவன் உள்பட பல ஜமீன்தார்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்ததால் பெரும் போர் வெடித்தது. அதற்கு முன்பே சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரியசாமி தேவர் 1834ல் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம். ஜமீன்தார்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பல பூசல்கள் இருந்து வந்தன. ஆனாலும், இதையெல்லாம் மிஞ்சி ஜமீன்தார்கள் குட்டி அரசாங்கமே நடத்தினர்.
அவர்களது அரச எல்கைக்குள் வேற்று ஆள் எவரும் நுழைய முடியாது. இதனால் பொதுமக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டன. 1936ம் ஆண்டு ஜமீன்களை ஒடுக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1972ல் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜமீன்தார்கள் சொத்தையெல்லாம் அரசு கையகப்படுத்தியது. முந்தினநாள்வரை லட்சாதிபதியாக இருந்த ஜமீன்தார்கள், மறுநாள் பொருளை இழந்து, ஆட்சி அதிகாரத்தை இழந்து நிர்க்கதியாகி விட்டனர். இனி தர்பார் இல்லை, அரண்மனை இல்லை, காவலாளிகள் இல்லை என்ற நிலை. தங்களிடம் இருந்த படைகளே அவர்களுக்கு சுமையானது. அரண்மனை சேவகர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலவில்லை. ஆனால், அந்த அளவுக்கு பொன்னையும், புகழையும் இழந்தாலும் தங்கள் முன்னோர்கள் கட்டிக் காத்து வணங்கி வந்த கோயில்களை மட்டும் அவர்கள் இழக்கத் தயாராக இல்லை.
“எங்களது முன்னோர்கள் வணங்கிய கோயில்களை எங்களுக்கே தாருங்கள்” என்று போராடினர். இதற்கு சம்மதித்த அரசு கோயில்களின் நிர்வாகத்தை மட்டும் அவர்கள் கட்டுபாட்டுக்குள் விட சம்மதித்தனர். ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட பிறகு யாருக்கும் புதிதாக பட்டம் கட்ட வில்லை. சிங்கம் பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி அதற்கு விதிவிலக்கு. இந்த சட்டம் வரும் முன்பே பட்டம் கட்டி இன்றும் ராஜாவாக வாழ்பவர். ஆடி அமாவாசை தோறும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் விழாவில் இவர் ராஜதர்பார் உடையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது உத்தரவுடன் தான் கோயில் சாமியாடிகள் பூக்குழி இறங்குகிறார்கள். இந்த கண்கொள்ளாக் காட்சியை காண உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.
அங்குள்ள காட்டுக்குள் தற்காலிக குடில் அமைத்து குடும்பத்தோடு தங்கி சமைத்து, சாப்பிட்டு, அய்யனை தரிசிப்பார்கள். குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் கூட சொரிமுத்து அய்யனார்தான் தங்கள் குலதெய்வம் எனக்கூறி வணங்குவர். இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனத்துக்குள் தென்றலுடன் அவ்வப்போது பன்னீரை தெளித்தது போல் சாரல் விழும் அற்புத இடமான பொதிகை மலையடிவாரம். இங்கு மான், மிளா ஆகியவை துள்ளி குதிக்க, பிளிரலுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும். 2500 வகையான அரிய மூலிகைகள் இங்கு வளர்ந்திருக்க அவற்றை தழுவி வரும் காற்று நமது உடல் பிணியை நீக்கும் தன்மை கொண்டது. இதனால் இவரை வந்து வணங்கும் போது, இயற்கையின் அரவணைப்பு நம் உடலில் உள்ள பாதி நோய்களை இல்லாமல் செய்துவிடும்.
இந்த மலையில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் போன்ற விஷ ஜந்துகள் உள்ளன. ஆனால், சொரிமுத்து அய்யனை தரிசிக்க வருபவர்களை இதுவரை எந்த விஷ ஜந்துவும் தீண்டியது இல்லை. பொதிகை மலையடிவாரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு செல்வது போல முகத்தில் மகிழ்ச்சி பொங்க செல்வார்கள். இங்குள்ள அய்யன் எல்லோரின் குறைதீர்க்கும் வள்ளலாய் விளங்குகிறான். சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. 1100 வருடங்களுக்கு முன்பு சிற்றரசர்களாக வாழ்ந்தவர்கள்தான் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் முன்னோர்கள். இவர்கள் “சிறுதாலி கட்டிய மறவர்” என்று அழைக்கப்படுகிறார்கள். சேதுபதி சமஸ்தானத்தை விட்டு விலகும் முன்பே இவர்கள் “கல்தேர் இழுத்த மறவர்” என்றும் அழைக்கப்பட்டனர்.
இவர்களின் முன்னோர்கள், ஸ்ரீ அபோதாரணத்தேவர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள தேவநல்லூர் கிராமத்தில் குடியேறினார்கள். அபோதாரணத்தேவர் மகள் வழி மகனை சிங்கம்பட்டி வல்லையர் மன்னன் தத்து எடுத்துக் கொண்டார். அவர் பெயர் பிரிதிபாலு. அவருக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க அபோதாரணத்தேவர் உதவி புரிந்தார். முதல் பட்டமாக ஆட்சியில் பிரிதிபாலுடன் அமர்ந்தார். அதன் பிறகு 31 வது பட்டமாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா வாழ்ந்து வருகிறார். திருவாங்கூரை தலைநகராகக் கொண்டு மன்னர் மார்த்தாண்டவர்மா ஆண்டு வந்தார். இவர் சிறுவயதில் தந்தையை இழந்தவர். சிறுவனான மார்த்தாண்ட வர்மாவை விரட்டிவிட்டு ஆட்சியை பிடிக்க அவரது உறவுகாரர்களான எட்டு வீட்டு பிள்ளைமார்கள் திட்டமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்தவுடன் மகாராணியார் உமையம்மை குழந்தையோடு தப்பி ஓடி பொதிகை மலையில் ஒளிந்து கொண்டார். பின்னர் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வைத்து பாளையக்காரர் சிங்கம் பட்டியாரை சந்தித்தனர். அவரது கதையை கேட்டதும் எட்டு வீட்டு பிள்ளைமார்கள் மீது சிங்கம் பட்டியார் வெறி கொண்டார். சேர மன்னருக்கு நல்லாதரவு கொடுத்து அவருக்கு வில் பயிற்சி, வாள் வீச்சில் திறன் மிகுந்த படைத்தலைவனாக உருவாக்கினார். வாலிபப் பருவம் அடைந்ததும் சேரமன்னர் பெரும் படையை திரட்டி மண்ணை மீட்க கிளம்பினார். அவருடன் முக்கிய வீரராக தனது மூத்த மகனையும் சிங்கம்பட்டியார் அனுப்பி வைத்தார். பெரும் படை திருவாங்கூர் சென்று எட்டுவீட்டு பிள்ளைமாரை விரட்டியது. ஆட்சியைக் கைப்பற்றி அரியணை ஏறினார் மார்த்தாண்ட வர்மன்.
போரில் சிங்கம்பட்டியாரின் மகன் மார்பில் அம்பு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவருக்கு என்ன கைமாறு செய்ய வேண்டும் என்றே சேரமன்னருக்கு புரியவில்லை. அவரது தாயார் உமையம்மை ராணி ஜமீன்தாரின் மகனுக்கு “இறப்பின் பின் சிறப்பு” என்ற வெகுமதியாக “நல்லகுத்தி” என்ற சிறப்புப் பட்டத்தைச் சூட்டினார். இது நாளடைவில் திரிந்து “நல்லகுட்டி” என்று வழங்கப்படுகிறது. அன்று முதல் “தென்னாட்டுப்புலி நல்லகுட்டி” என்ற சிறப்புப் பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். இழந்த மண்ணை மீட்க உதவியதற்கு கைமாறாக சிங்கம்பட்டியாரிடம் எது கேட்டாலும் தருகிறேன் என்று சேர மன்னர் கேட்டார். அதற்கு “மன்னா, உங்களை ஜெயிக்க வைக்க வேண்டும். இழந்த அரசை மீட்டுத்தரவேண்டும் என்று எண்ணினேன். அதை முடித்து விட்டேன். என் மகன் வாள் வித்தையில் வீரன் தான்.
ஆனாலும் உங்களுக்காக உயிரை கொடுத்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டான். ஏதாவது தரவேண்டும் என்று தங்களுக்குத் தோன்றினால், இந்த மலையில் எங்களுக்கு குச்சி ஒடிக்க காடு தந்தால் போதும்” என்றார். “குச்சி ஒடிக்க என்ன காடு, இந்த காடே உமக்குதான் என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியையும் 5 கிராமங்களையும் சாஸ்தாவின் மூலாதார ஷேத்திரமான காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள 8 கோயில்களையும், 5 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் தோப்பு துரவுகளையும் கொடுத்தார் சேர மன்னர். ஜமீன் ஒழிப்புசட்டம் வரும் வரை இந்த இடத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். இந்த ஜமீனுக்கு தனிச்சிறப்பு “வான் பொய்த்தாலும் நான் பொய்யேன்” என்று பாயும் தாமிரபரணி நதியும் அதன் துணைநதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு ஆகியவையும் ஆகும்.
பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவை இந்த 80 ஆயிரம் ஏக்கருக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன. சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நரசிம்மபாரதி வனபிரதேசத்தில் உள்ள பாண தீர்த்தத்திற்கு வந்திருந்தார். இந்த தீர்த்ததிற்கெல்லாம் அதிபதியாக உள்ள சிங்கம்பட்டி ஜமீன்தாரை அழைத்து, “தீர்த்தபதி” என்றழைத்து பட்டம் சூட்டினார். அதன்பிறகு இவர்கள் “தீர்த்தபதி ராஜா” என்றே அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இறைவனை வணங்குவதே கண்கொள்ளா காட்சியாகும். சிங்கம் பட்டி ஜமீன்தார் ஆட்சிக்கு உள்பட்ட சொரிமுத்து அய்யனார், 18 சித்தர்களின் முதன்மையானவரான அகத்திய பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இது போன்று பல தெய்வங்களை சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் வழிவழியாக கொண்டாடி வருகிறார்கள்.